»   »  தலயைக் கவிழ்த்த கிரீடம்

தலயைக் கவிழ்த்த கிரீடம்

Subscribe to Oneindia Tamil

அஜீத் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கிரீடம், ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறி விட்டது. அஜீத்தின் தோல்விப்பட வரிசையில் கிரீடமும் சேர்ந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மலையாளத்தில் வெளியான படம் கிரீடம். அந்தப் படத்தை அதே கதையுடன், அதை டைட்டிலுடன், மலையாளியான பழம்பெரும் தயாரிப்பாளர் - நடிகர் பாலாஜியின் நிறுவனம் தமிழில் அஜீத், திரிஷாவை வைத்து உருவாக்கியது.

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய்தான் இப்படத்தை இயக்கினார். அஜீத்தின் முந்தைய படமான ஆழ்வார் பெரும் தோல்வியைத் தழுவியதால் கிரீடம் படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். நேற்று கிரீடம் உலகெங்கும் ரிலீஸானது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டது கிரீடம். இப்படிப்பட்ட கதையை எப்படி அஜீத் ஒத்துக் கொண்டு நடித்தார் என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்.

சென்னையில் இப்படம் மொத்தம் 6 தியேட்டர்களில் கிரீடம் திரையிடப்பட்டுள்ளது. தினசரி 24 காட்சிகள் இங்கு காட்டப்பட்டு வருகின்றன. மாயாஜால் திரையரங்க வளாகத்தில் தினசரி 10 காட்சிகளுக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 26 காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த சிவாஜியை 16 காட்சிகளாக் குறைத்தனர்.

ஆனால் கிரீடம் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து கிரீடம் படக் காட்சிகளை 4 ஆக குறைத்து விட்டனர். சிவாஜி இப்போது 21 காட்சிகளாக உயர்ந்து விட்டது.

முதல் நாளில் முன்பதிவாக சென்னை தியேட்டர்களில் ரூ. 28 லட்சம் வசூலாகியுள்ளது. ஆனால் தற்போது முன்பதிவுக்கு யாரும் முன்வரவில்லை என்று தியேட்டர்காரர்கள் கூறுகின்றனர்.

கிரீடம் படம் குறித்து திரைப்பட விமர்சகர் ஒருவர் கூறுகையில், ஹீரோ சம்பந்தப்பட்ட கதை என்றால் கிளைமேக்ஸ் பாசிட்டிவாக இருக்க வேண்டும். ஆனால் இப்படத்தில் ஆரம்பத்திலிருந்தே இயக்குநரின் அணுகுமுறை தவறாகவே உள்ளது.

ரசிகர்களை லயிக்க வைக்கும் வகையில் அஜீத்துக்கு காட்சிகள் வைக்கப்படவில்லை. விவேக்கின் காமெடியும் கூட கடுப்படிக்கும் வகையில் உள்ளது. சில காட்சிகளில் அறுவறுப்பான காட்சிகளை வைத்துள்ளனர். எப்படி இந்தப் படத்தை அஜீத் ஏற்றுக் கொண்டார் என்று புரியவில்லை என்றார்.

கிரீடம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதால் அஜீத் தரப்பு பெரும் அப்செட் ஆகியுள்ளதாம். முந்தைய படமான ஆழ்வார் மிகப் பெரிய தோல்விப் படமானது. அதற்கு முன்பு ரிலீஸான பரமசிவன், திருப்பதியும் அஜீத்துக்கு தோல்விப் படங்கள்தான். எனவே கிரீடம் படத்தை அஜீத் தரப்பு பெரிதும் எதிர்பார்த்திருந்தது.

தோல்விகள் தொடருவதால் அஜீத் பெரும் அப்செட் ஆகியுள்ளாராம். பில்லா வந்துதான், அஜீத்தின் காயத்திற்கு மருந்து போட வேண்டும் என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

திரிஷாவும் அப்செட்

அஜீத்தைப் போலவே கிரீடம் பட நாயகி திரிஷாவும் அப்செட் ஆகியுள்ளார்.

அதை விட அஜீத் ரசிகர்களும், தனது ரசிகர்களும் மோதிக் கொண்டதுதான் திரிஷாவை பெரும் கடுப்பாக்கியுள்ளது.

கிரீடம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கட் அவுட் வைப்பது, பேனர் கட்டுவது தொடர்பாக இருவரது ரசிகர்களும் மோதிக் கொண்டனர். கட் அவுட்கள் கிழிக்கப்பட்டன, தீவைப்புக்கும் முயற்சிக்கப்பட்டது.

பல தியேட்டர்களில் திரிஷா நிறுவியுள்ள திரிஷா பவுண்டேஷன் சார்பில் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்கள் திரிஷாவை அப்செட் ஆக்கி விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், திரிஷா பவுன்டேஷனை ஆரம்பித்ததே, ஏழைகளுக்கும், ஆதரவற்ற சிறார்களுக்கும் உதவத்தான். ஆனால் எனக்கு கட் அவுட் வைக்கவும், பேனர்கள் வைக்கவும் இந்த பவுண்டேஷன் நிறுவப்படவில்லை.

ஆனால் திரிஷா பவுண்டேஷன் சார்பில் கட் அவுட், பேனர் வைத்தது என்னை வருத்தமடைய வைத்து விட்டது.

படத்தின் ரிசல்ட் குறித்து நான் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை. இருந்தாலும் ஏமாற்றமாக உணர்கிறேன். இருப்பினும், படம் இப்போதுதான் ரிலீஸாகியுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil