»   »  தயாரிப்புக்கு மாதவன் குட்பை!

தயாரிப்புக்கு மாதவன் குட்பை!

Subscribe to Oneindia Tamil
Madhavan
எவனோ ஒருவன் படத்தைத் தயாரித்தபோது அதன் வலி என்னை பாதித்து விட்டது. எனவே இனிமேல் தனியாக நான் படத் தயாரிப்பில் ஈடுபட மாட்டேன். இணை தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் எனது பணி தொடரும் என்று கூறியுள்ளார் மாதவன்.

நடிகராக மட்டுமே இருந்து வந்த மாதவன், எவனோ ஒருவன் மூலம் தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தனியாக லூக்காஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாதவன். அப்போது மனம் விட்டுப் பேசினார்.

மாதவன் கூறுகையில், எவனோ ஒருவன் எனது முதல் தயாரிப்பு. ஆனால் ஒரு தயாரிப்பாளராக நான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். ஒரு தயாரிப்பாளர் படும் வலிகளை நான் உணர்ந்து விட்டேன். ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விடலாமா என்று கூட நினைத்தேன்.

ஆனால் சினிமாத் துறையில் இதெல்லாம் சாதாரண விஷயம்தான் என்பதை உணர்ந்து தொடர்ந்து தயாரிப்பாளராக நீடிக்க முடிவு செய்தேன்.

இருப்பினும் எதிர்காலத்தில் தனியாக படத் தயாரிப்பில் ஈடுபட மாட்டேன். வேண்டுமானால் ஒரு இணை தயாரிப்பாளராக செயல்படுவேன். நல்ல படங்களுக்கு விநியோகஸ்தராக தொடர்ந்து செயல்படுவேன்.

இளம் பெண்களிடம் எனக்கு பெரிய அளவில் கிரேஸ் இருப்பது குறித்து பலரும் கேட்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன என்று எனக்கே இன்னும் தெரியவில்லை. இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். ஒரு நடிகராக, என் நடிப்பு மீதான அவர்களின் காதல் தொடரட்டுமே.

முடிந்தவரை பல மொழிகளில் நடிப்பதுதான் ஒரு நடிகருக்கு நல்லது. இதன் மூலம் நாமும் தொடர்ந்து போட்டியில் இருக்க முடியும். பல மொழிகளில் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இப்போது வாழ்த்துக்கள், லீலை ஆகிய இரு தமிழ்ப் படங்கள், மும்பை மேரி ஜான் என்ற இந்திப் படம் (டோம்பிவிலி பாஸ்ட் படத்தின் இந்தி ரீமேக்) ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில இந்திப் படங்களும் கிடைத்துள்ளன என்றார் மாதவன்.

பேட்டியின்போது இயக்குநர்கள் சீமான், நிஷிகாந்த், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil