»   »  எம்.பி ஆகிறார் மம்முட்டி

எம்.பி ஆகிறார் மம்முட்டி

Subscribe to Oneindia Tamil

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ராஜ்யசபா எம்.பி பதவியைக் கொடுக்க கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

கேரள அரசியலில் நடிகர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அரசியலில் நடிகர்கள் நுழைவதை அங்குள்ள மக்களும் ஆதரிப்பதில்லை. முன்பு மறைந்த நடிகர் பிரேம் நசீர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் போதுமடா அரசியல் என்று ஜகா வாங்கி விட்டார்.

அதன் பிறகு எந்த நடிகரும் அரசியலில் ஈடுபட்டதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வில்லன் நடிகர் தேவன், புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். மேலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக அவர் கருத்துக் கூறப் போக அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், மெகா ஸ்டார் மம்முட்டியை ராஜ்யசபா எம்.பி. ஆக்க கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மம்முட்டி வெளிப்படையாக எந்தக் கட்சிக்கும் இதுவரை ஆதரவு தெரிவித்ததில்லை. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவருக்கு அபிமானம் உண்டு.

சமீபத்தில் சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது. இதில் மம்முட்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, குஜராத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இல்லாமல் போய் விட்டது. அது இருந்திருந்தால் இனப் படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார்.

இந்தப் பேச்சு கேரள பாஜகவினரிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இளைஞர் அணி சார்பில் மம்முட்டியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆனால் மம்முட்டிக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தியது.

கேரளாவில் இந்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மம்முட்டிக்கு எம்.பி. பதவியைக் கொடுத்து அவரை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மம்முட்டியின் சகோதரர் ஏற்கனவே முஸ்லீம் லீக் கட்சியில் உள்ளார். அக்கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். இந்த நிலையில், மம்முட்டியும் அரசியலுக்கு வரவுள்ளதாக கிளம்பியுள்ள தகவலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.பி பதவிக்கு தான் நிறுத்தப்படவுள்ள விஷயம் மம்முட்டிக்குத் தெரியுமா என்று தெரியவில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil