»   »  மனோஜுக்கு மறு வாழ்வு

மனோஜுக்கு மறு வாழ்வு

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அருந்தவப் புதல்வன் மனோஜ் கே. பாரதிக்கு மறு வாழ்வு கொடுக்க பிரியத்துக்குரிய அப்பா முடிவு செய்துள்ளார். மகன் பெயரில் புதுக் கம்பெனி ஆரம்பித்து அவரை இயக்குநராக அவதாரம் எடுக்க வைக்கிறார்.

லண்டனில் படித்த மனோஜ் முதலில் மணி ரத்னத்திடம் உதவியாளராக இருந்தார். ஆனாலும் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டிய மனோஜை தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோ ஆக்கினார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கம், வைரமுத்து பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, மணிரத்தினம் கதை, ராஜீவ் மேனன் கேமரா என எல்லாம் பெஸ்ட் ஆக இருந்தும் திரைக்கதை சரியில்லாததால் படம் பெரும் தோல்வி அடைந்தது.

கிராமங்களை இயற்கையாய் காட்டி நம்மை மகிழ்வித்து வந்த பாரதிராஜா தாஜ்மகால் படத்தில் மகா செயற்கைத்தனமான கிராமத்தைக் காட்டினார். ஜீன்ஸ் பேண்ட், பிராண்டட் சர்டடுகளுடன் வந்து படத்தில் மாடு மேய்த்தார் ஹீரோ மனோஜ்.

மேலும் மனோஜுக்கு நடிப்பும் வரவில்லை. ஹீரோயினாக வந்த ஒல்லி குச்சி ரியா சென்னை பார்த்தாலே மிக பரிதாபமா இருந்தது. இத்தனை காரணங்களால் படம் சுத்தமாக போணியாகவில்லை. இந்தப் படத்தால் பொருளாதாரரீதியில் பாரதிராஜாவுக்கு செம அடி.

இதையடுத்து அல்லி அர்ஜூனா உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார் மனோஜ். ஆனாலும் பெரிய அளவில் அவருக்கு பிரேக் கிடைக்கவில்லை. சத்யராஜின் மகா நடிகன் படத்தில் சின்ன வேடத்தில் வந்தாலும் மனோஜுக்கு அது நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், தன் உடன் நடித்த மலையாளத்து மங்கை நந்தனாவை காதலித்து கரம் பிடித்துவிட்டார் மனோஜ். கல்யாணமாகி பொறுப்பான குடும்பத் தலைவரும் ஆகி விட்டார். இதனால் மனோஜுக்கு சீரிய வழியைக் காட்டும் பொறுப்புக்கு அப்பா பாரதிராஜா வந்துள்ளார்.

தான் தற்போது இயக்கியுள்ள பொம்மலாட்டம் படத்தில் தனது உதவியாளராக மனோஜை வைத்துக் கொண்ட பாரதிராஜா, அவர் காட்டிய ஈடுபாட்டைப் பார்த்து அசந்து விட்டாராம்.

இதைத் தொடர்ந்து தனது மகன் பெயரில் புது கம்பெனியை உருவாக்கி அவரை இயக்குநராக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தீட்டியுள்ளார். பொம்மலாட்டம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் மனோஜ் பெயரில் புதுக் கம்பெனி பிறக்கவுள்ளதாம். அவரது இயக்கத்தில் உருவாகப் போகும் முதல் படத்தின் அறிவிப்பும் அன்றே வருமாம்.

இயக்குநர் இமயத்தின் வாரிசாக, இயக்கத்தில் சிறக்க மனோஜுக்கு நாமும் அட்வான்ஸாக வாழ்த்து தெரிவிப்போம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil