»   »  கோடீஸ்வர மோகன்லால்!

கோடீஸ்வர மோகன்லால்!

Subscribe to Oneindia Tamil

மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு ஒன்னேகால் கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் நடிகர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் தரப்படுவது இதுவே முதல் முறையாம்.

மலையாள சினிமா படு வித்தியாசமானது. பக்கத்தில் உள்ள தமிழிலும், தெலுங்கிலும் நடிகர், நடிகைகள் கோடிகளில் புரண்டு கொண்டுள்ள நிலையில் மலையாளத்தில் மட்டும் லட்சத்தில்தான் இருந்தனர் நடிகர், நடிகைககள்.

மிகப் பெரிய நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் சில லட்சங்களையே சம்பளமாக வாங்கிக் கொண்டு நடிக்கின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறாக கோலிவுட்டில் சிம்பு போன்ற குட்டி நடிகர்களே சில கோடிகளை சம்பளமாக பெற்று வருகின்றனர்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் சம்பளங்களை சேர்த்தால் மலையாளத்தில் 50 படங்களைத் தயாரித்து விட முடியும். அந்த அளவுக்கு படு நேர் மாறாக இருந்து வருகிறது மலையாளப் படவுலகம்.

அங்கு கோடி என்பதே இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. சில லட்சங்களிலேயே படத் தயாரிப்பை முடித்துக் கொள்வது வழக்கம். தற்போதுதான் முதல் முறையாக மம்முட்டி நடித்து வரும் பழசிராஜாவை சில கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். இதுதான் மலையாளத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாம். அதன் மொத்த பட்ஜெட் 7 கோடிதான்.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் மோகன்லால்.

அவர் புதிதாக நடிக்கவுள்ள காலேஜ் குமரன் படத்திற்கு மோகன்லாலுக்கு ரூ. 1.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இப்படத்தை துளசிதாஸ் இயக்கவுள்ளார். எரிக் மற்றும் எமில் ஆகியோர் படத்தைத் தயாரிக்கின்றனர்.

மோகன்லாலுக்கு இதில் விமலா ராமன் உள்பட மொத்தம் 6 நாயகிகள் ஜோடி போடுகிறார்களாம்.

படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் தேவை என்று இயக்குநர் கூறியபோது சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்குமாறு மோகன்லால் தரப்பில் கூறப்பட்டதாம். இதையடுத்து அவரது சம்பளத்தை கோடிக்குக் கொண்டு போய் விட்டார்களாம்.

வழக்கமாக மோகன்லால் வாங்கும் சம்பளம் ரூ. 60 முதல் 80 லட்சத்துக்குள்தானாம். ஆனால் தற்போது ரூ. 1.25 கோடி வாங்கியுள்ளதன் மூலம் மலையாளத் திரையுலகின் முதல் கோடீஸ்வர நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் மோகன்லால்.

ஆனால் மோகன்லாலுக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்ததற்கு திரையுலகில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இப்படி சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதால் தயாரிப்பாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாம்.

மோகன்லாலைத் தொடர்ந்த மம்முட்டி, திலீப் ஆகியோரும் 1 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டால் நமது நிலை என்னாவது என்பது தயாரிப்பாளர்களின் கவலை.

சூப்பர் ஸ்டார் நடிகர்களே இப்பதான் கோடியைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நடிகைகள் எவ்வளவு வாங்குவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்பப் புரியுதா, மலையாள நடிகைகள் தமிழுக்கு தாவித் தாவி வருவதன் ரகசியம்?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil