இதுக்கு எம்.எஸ். பாஸ்கரையே நடிக்க வச்சிருக்கலாம்.. ஜிடி நாயுடு போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், துஷாரா விஜயன், பிரியாமணி, சத்யராஜ், ஜெயராம் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜி.டி. நாயுடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அதற்கு பாராட்டுக்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
நடிகர் மாதவன் பயோபிக் படங்கள் மீது அளவுகடந்த ஆர்வத்தை கொண்டிருக்கும் நிலையில், ராக்கெட்ரி படத்தை தொடர்ந்து ஜி.டி. நாயுடு படத்திலும் நடித்து வருகிறார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ராக்கெட்ரி படத்தை இயக்கி இயக்குநராகவும் அப்படியே நம்பியாக வாழ்ந்தும் அசத்தினார் மாதவன். இந்நிலையில், விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவாகவும் தற்போது மாறியுள்ளார்.
நயன்தாரா படம் சொதப்பல்: நடிகர் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. ஓடிடியில் நேரடியாக வெளியாக காரணமே படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காதது தான் என்றனர். ஓடிடியிலும் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் நடிப்பை மட்டுமே பாராட்டினர். அந்த படத்தில் நயன்தாராவின் கணவராகவும் வில்லனாகவும் மாதவன் நடித்திருந்தார். டெஸ்ட் படத்திலும் விஞ்ஞானியாகவே மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜி.டி. நாயுடு ஃபர்ஸ்ட் லுக்: இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன் ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜி.டி. நாயுடு போல வழுக்கை விழுந்த தலையுடன் மாதவன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படம் மாதவனுக்கு தேசிய விருதை வாங்கித் தரும் என பாராட்டி வருகின்றனர். கமர்ஷியல் படங்களை தவிர்த்து விட்டு மாதவனாவது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறாரே என்றும் ரசிகர்கள் அவரை கொண்டாட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
எம்.எஸ். பாஸ்கர் நடிச்சிருக்கலாம்: மாதவனின் ஜி.டி. நாயுடு லுக்கை பார்த்த ரசிகர்கள் இது ஜி.டி. நாயுடு போல இல்லை என்றும் எம்.எஸ். பாஸ்கர் பயோபிக்கில் மாதவன் நடிக்கிறாரா என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த கெட்டப்பில் தான் நடிக்க வேண்டும் என்றால் இதுக்கு தேசிய விருது வென்ற எம்.எஸ். பாஸ்கரையே நடிக்க வைத்திருக்கலாம். ஐடியா இல்லாத டீம் என ட்ரோல் செய்து வருகின்றனர். ஜி.டி. நாயுடுவின் இளமைக்கால தோற்றத்தில் மாதவன் எப்படி வரப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அடுத்த ஆண்டு சம்மருக்கு இந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











