வெற்றிமாறன் படமா?.. மிஷ்கின் படமா?.. வெளியான எஸ்டிஆர் 49 ப்ரோமோ.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் 49வது படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் மிஷ்கின் ஸ்டைலில் ஒரு 35 நொடிகள் மட்டுமே நடக்கக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கப்போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் ஆரம்பிக்கவில்லை. விரைவில் அந்த படம் ஆரம்பமாகும் என தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

சிம்புவின் 49வது படத்தை இதுவரை பல தடவை மாற்றிய நிலையில், கடைசியாக வெற்றிமாறன் படம் தான் சிம்புவின் 49வது படம் என்பது உறுதியாகி உள்ளது.
வெற்றிமாறன் பிறந்தநாள்: 1975ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி கடலூரில் பிறந்து வளர்ந்த வெற்றிமாறன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலையில் இருந்தே திரை பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். பாலுமகேந்திராவின் மாணவராக இருந்து தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார்.
தயாரிப்பு நிறுவனம் மூடல்: கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியை நடத்தி வந்த வெற்றிமாறன் மனுஷி மற்றும் பேட் கேர்ள் படங்கள் தான் தனது தயாரிப்பில் இருந்து வெளியாகும் கடைசி படங்கள் என்றும் இதற்கு மேல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்த முடியாது என்றும் அறிவித்து விட்டார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிமாறனுக்கு பல கோடி நஷ்டம் என்றும் தொடர்ந்து சட்ட சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்படியொரு முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறுகின்றனர். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படம் பல தடைகளை தாண்டி நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
எஸ்டிஆர் 49 அப்டேட்: சிம்புவை வைத்து வடசென்னை உலகில் ஒரு படத்தை வெற்றிமாறன் உருவாக்கி வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தள்ளிப்போனது. எஸ்டிஆர் 49 என பார்க்கிங் இயக்குநர் இயக்கத்தில் கயாடு லோஹர் ஜோடி, சந்தானம் காமெடி என அறிவிக்கப்பட்டு பட பூஜை போடப்பட்ட படமும் டிராப் ஆனது. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு தனது 49வது படத்தில் நடித்து வருகிறார். அதன் அப்டேட் விரைவில் வெளியாகும் என தற்போது வெற்றிமாறன் பிறந்தநாளுக்காக ஒரு சின்ன அப்டேட்டை கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார்.
மிஷ்கின் ஸ்டைலில்: ஹீரோக்களுக்கான பில்டப்புகளை கொடுப்பதை தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் கூட விடவில்லையே என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். மிஷ்கின் ஸ்டைலில் வெறும் சிம்புவின் கால்களை மட்டுமே காட்டி விட்டு ஃபர்ஸ்ட் லுக் தோற்றம் கூட காட்டாமல் விட்டது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. இது வெற்றிமாறன் படமா? அல்லது மிஷ்கின் படமா என கேள்விகள் எழுந்துள்ளன.
தாறுமாறா இருக்கு: வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், இடையே தனுஷ் வந்ததால் அந்த படம் சிம்பு பண்ண முடியாமல் போய்விட்டது என வெற்றிமாறன் கூறிய நிலையில், சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் தாறுமாறாக இருக்கும் என்றும் இந்த அப்டேட்டே கூஸ்பம்ப்ஸ் கொடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











