»   »  'பொறுக்கி' டூ 'அதிருதுல்ல'

'பொறுக்கி' டூ 'அதிருதுல்ல'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொறுக்கி என்ற பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அதை அதிருதுல்ல என்று மாற்றி விட்டனர்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், ஒரு நல்ல வேலையைச் செய்தது. அதாவது தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து என்பதுதான் அந்த அறிவிப்பு. அதற்கு முன்பு வரை ஏய், ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் போக்கு இந்த உத்தரவுக்குப் பின்னர் அடியோடு மாறியது.

சுத்தமான தமிழில் பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர். இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் சாதிக்க முடியாததை முதல்வர் கருணாநிதி ஒரே உத்தரவில் சாதித்துக் காட்டினார்.

ஆனால் எதையுமே மிஸ்யூஸ் செய்வதில்தான் நம்ம ஆட்கள் கில்லாடிகளாச்சே. தமிழ்தானே உங்களுக்குத் தேவை என்று நினைத்துக் கொண்டு தமிழில் உள்ள நல்ல வார்த்தைகளை விட்டு தேவையில்லாத வார்த்தைகளைக் கோர்த்து படங்களுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தனர்.

அப்படி வைக்கப்பட்ட படங்கள்தான் கெட்டவன், பொறுக்கி, பொல்லாதவன் என்பதெல்லாம். தாம் தூம் என்ற வார்த்தையும் கூட என் தமிழோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இப்படி அரசு உத்தரவை தவறாகப் பயன்படுத்தி கலாச்சார சீரழிவுக்கும், தவறான பயன்படுதலுக்கும் வழி காட்டும் வகையிலான பெயர்கள் வைப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காத பெயர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்றார்.

இதையடுத்து களம் இறங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில், நல்ல தமிழ்ப் பெயர்களை படங்களுக்கு சூட்டுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டது. மேலும் தமிழ் என்ற பெயரில் தாறுமாறான பெயர்களை சூட்டியிருந்தவர்களைக் கூப்பிட்டு பெயர்களை மாற்றுமாறு கூறியது.

தனுஷ் நடிக்கும் பொல்லாதவன் படத் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாம். இந்தப் படத்தின் பெயர் அப்படியே தொடரும் என்று தெரிகிறது.

அதேசமயம், சுந்தர்.சி. நாயனாக நடிக்க, ஷக்தி சிதம்பரம் தயாரிக்க உருவாகும் பொறுக்கி படத்தின் பெயரை மாற்றியுள்ளனர். அதிருதுல்ல என்று இப்போது பெயரிட்டுள்ளனர். சிவாஜி படத்தில் ரஜினி பயன்படுத்தும் பன்ச் டயலாக்கின் ஒரு பகுதியை தனது பட டைட்டிலாக மாற்றி விட்டார் ஷக்தி.

ஆனால் இந்தப் பெயரும் குண்டக்க மண்டக்க இருப்பதால் வரி விலக்கு கிடைக்குமா அல்லது வேறு ஏதாவது கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிம்பு மட்டும்தான் தனது படத்தின் பெயரை (கெட்டவன்) மாற்ற முடியாது என்று பிடிவாதமாக கூறி வருவதாக தெரிகிறது. கெட்டவன் என்பது பெண்ணால் கெட்டவன் என்ற பொருளில் வருகிறது என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அதை தயாரிப்பாளர் கவுன்சில் ஏற்றதாக தெரியவில்லை.

ஆனாலும் அதுகுறித்து சிம்பு கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. மொத்தத்தில் கெட்டவன் டைட்டில் மாறுமா, மாறாதா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

Read more about: sundarc

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil