»   »  ஒன்பது ரூபாய் நோட்டு

ஒன்பது ரூபாய் நோட்டு

Subscribe to Oneindia Tamil


பெரியார் படத்துக்குப் பிறகு சத்யராஜ் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ள ஒன்பது ரூபாய் நோட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click here for more images

லொள்ளும், ஜொள்ளுமாக போய்க் கொண்டிருந்த சத்யராஜின் திரையுலக பயணத்தில் மிகப் பெரிய மைல்கல் பெரியார். அவரது மானசீக குருவின் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பால் நெகிழ்ந்து போன சத்யராஜ், பெரியாராகவே அப்படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார்.

பெரியார் படத்தில் நடித்த தாக்கத்தால், இனிமேல் கில்மா வேடங்களில் நடிக்க மாட்டேன், சீரியஸான ரோல்களில்தான் நடிப்பேன் என்ற முடிவுக்கும் வந்தார்.

அந்த முடிவுக்கு சத்யராஜ் வந்த அடுத்த நிமிடமே அவரை அணுகிய இயக்குநர் தங்கர் பச்சான், தனது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜை நடிக்க வைத்தார்.

இது தங்கர் எழுதிய கதை. இப்படத்தில் 80 வயது விவசாயி கேரக்டரில் சத்யராஜ் நடித்து வருகிறார்.

1980களில் தங்கர் எழுதிய கதைதான் ஒன்பது ரூபாய் நோட்டு. இந்த நாவலை இப்போது திரைப்படமாக்கியுள்ளார் தங்கர். சத்யராஜுடன் இணைந்து நடித்திருப்பவர் தேசிய விருது பெற்ற அர்ச்சனா.

இப்படம் குறித்து சத்யராஜ், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரித்தனர்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சத்யராஜ் காணப்பட்டார். அவர் கூறுகையில், எனக்கு சவாலாக அமைந்த கேரக்டர் இது. கடந்த 30 ஆண்டுகளில் நான் நடித்த எண்ணற்ற கேரக்டர்களில் இதைதான் மிகவும் வித்தியாசமான கேரக்டர் என்பேன்.

எனது சக திரைக் கலைஞர்களுக்கு நான் இந்த நேரத்தில் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களது வாழ்க்கையில் தங்கர் பச்சானின் ஒரு படத்திலாவது நடித்து விடுங்கள். அது உங்களுக்கு நல்ல அங்கீகாரத்தை வழங்க உதவும்.

தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமல்லாது, எனக்கும் புதிய ஜன்னல்களை இந்தப் படம் திறந்து வைக்கும்.

மறுபடியும் என்னை நடிக்க தங்கர் கூப்பிட்டால் சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் சத்யராஜ்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலக சினிமாவின் உயரங்களை இப்படம் தொடும். இந்திய சினிமாவின் முக்கியமான பிரதிநிதியாக சத்யராஜ் மாறுவார் என்று புகழாரம் சூட்டினார்.

தங்கர்பச்சான் பேசுகையில், குழந்தைகள், உறவினர்கள், உற்றார்களால் கைவிடப்பட்ட ஒரு முதிய தம்பதியின் கதை இது. 3 வெவ்வேறு கால கட்டங்களில் கதை நடப்பதாக உள்ளது.

1972ல் ஆரம்பித்து 2007ல் முடிவது போன்று அமைத்துள்ளேன். படத்தின் பெரும்பகுதியை தமிழகத்தின் தொலைதூர கிராமங்களில் வைத்துப் படமாக்கியுள்ளேன். இதுவரை சினிமாக்காரர்கள் யாருமே போகாத இடங்கள் அவை.

நல்ல தியேட்டர்கள் கிடைத்தால் தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும். இல்லாவிட்டால் தீபாவளிக்கு சில வாரங்கள் கழித்து படம் திரைக்கு வரும் என்றார்.

எடிட்டர் லெனின் கூறுகையில், இந்தப் படத்தைப் பார்க்கவும், உணரவும் ரசிகர்களுக்கு நிச்சயம் உள்ளார்ந்த அறிவு வேண்டும். இந்தப் படத்தை சினிமா விமர்சகர்கள் எப்படி உணர்ந்து, விமர்சனம் செய்யப் போகிறார்கள் என்பதுதான் எனது கவலை என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil