twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பின்னிட்டீங்க கமல் ...'

    By Staff
    |


    தசாவதாரம் படத்தில் கமல் போட்டுள்ள 10 கெட்டப்பையும் பார்த்து வியந்த முதல்வர் கருணாநிதி, பின்னிட்டீங்க கமல், கலைஞானிங்கறதை நிரூபிச்சிட்டீங்க என்று கமலைப் பாராட்டியுள்ளார்.

    Click here for more images

    தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. ஸ்டில்களில் விசேஷம் இருக்கிறதோ இல்லையோ, படத்தில் பல விசேஷங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, 10 வேடங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனத்தையும் கமலே எழுதியுள்ளார். அத்தோடு இல்லாமல், 10 கேரக்டர்களுக்கும் வித்தியாசமான குரல்களில் டப்பிங் கொடுத்துள்ளாராம்.

    அதேபோல ஆசினும் சொந்தக் குரலில் பேசியுள்ளார். அதிலும் அய்யராத்துப் பெண்ணாக பின்னியுள்ளாராம். குரலில் கலக்கியுள்ளாராம். பிரமாதமாக வந்துள்ளதாம் அவரது பேச்சு.

    சமீபத்தில் தசாவதாரம் படத்தில் கமல் போட்டுள்ள 10 வேடங்கள் அடங்கிய காட்சிகள், முதல்வர் கருணாநிதிக்கு போட்டுக் காட்டப்பட்டதாம்.

    கமல்ஹாசனின் 10 வேடங்களையும் பார்த்து அசந்து போய் விட்டாராம் கருணாநிதி. அனைத்துக் காட்சிகளையும் பார்த்து பிரமித்த கருணாநிதி, பின்னிட்டீங்க கமல், கலைஞானின்னு நிரூபிச்சிட்டீங்க என்று பாராட்டித் தள்ளி விட்டாராம். கலைஞானி என்று கமலுக்குப் பட்டம் கொடுத்ததே கருணாநிதிதான் என்பது நினைவிருக்கலாம்.

    கருணாநிதியின் பாராட்டு குறித்து கமல் கூறுகையில், இளைஞருக்கே உரிய உற்சாகத்துடன் படக் காட்சிகளைப் பார்த்தார் கலைஞர். என்னை மிகவும் பாராட்டினார். முதல்வர் வாயால் கிடைத்த பாராட்டை, ஆஸ்கர் விருதுக்கு சமமாக கருதுகிறேன்.

    (எனது) ராஜ்கமல் நிறுவனத்துக்குப் பிறகு எனது படத்தின் தயாரிப்புக்காக கேட்டதையெல்லாம் கொடுத்த, சொன்னபடி செலவு செய்த ஒரே நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ்தான்.

    படத்தின் தொடக்கக் காட்சியில் 10,000 பேர் தோன்றுகிறார்கள். அந்தக் காட்சிக்காக 5000 வித்தியாசமான குரல்களை சேர்க்கவுள்ளோம். இந்தக் காட்சி அடுத்த வாரம் நேரு உள்ளரங்கத்தில் படமாக்கப்படவுள்ளது என்றார்.

    இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், பிராணமர், குள்ள மனிதர், விஞ்ஞானி, சண்டை வீரர், கருப்பர், டூரிஸ்ட் கைடு, திருடன், வயதான பெண், சக்கரவர்த்தி, இளம் பெண் ஆகிய 10 விதமான ரோல்களில் நடித்துள்ளார் கமல்.

    கமல்ஹாசனின் தொழில் பக்தி, நடிப்புத் திறமை குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முழுமையான நடிகர்.

    படத்தின் விஷூவல் எபக்ட்ஸ் வேலைகள் மூன்று சாப்ட்வேர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நிறுவனங்களும் மிகச் சிறப்பான முறையில் தங்களது பணியை செய்து கொண்டுள்ளனர்.

    படத்தின் திரைக்கதையை மூன்று முன்னணி கதாசிரியர்கள் கமலிடமிருந்து கேட்டுப் பாராட்டியுள்ளனர். தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் போல இதுவும் மிகப் பெரும் ஹிட் படமாகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    தசாவதாரம் படத்தில் சந்தானபாரதி, பி.வாசு, ஆர்.சுந்தரராஜன், ஈரோடு செளந்தர், ரமேஷ் கண்ணா, அப்புறம் நான் என பல இயக்குநர்கள் நடித்துள்ளனர் என்றார் ரவிக்குமார்.

    ஹாலிவுட் சண்டை மாஸ்டரான ஜூப், படத்தின் சண்டைக் காட்சியை வடிவமைத்துள்ளார். கமலுக்காக அதிக சிரத்தை எடுத்து ஒரு சண்டைக் காட்சியை வடிவமைத்துள்ளார் ஜூப். இதற்காக 20 நாட்கள் எடுத்துக் கொண்டாராம்.

    சண்டைக் காட்சியின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட பலவற்றில் ஜூப் எடுத்துக் கொண்ட அக்கறையைப் பார்த்து யூனிட்டில் உள்ளவர்கள் பிரமித்துப் போய் விட்டார்களாம்.

    படத்தில் பிரமிக்க வைக்கும் சில சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸ் உதவியுடன் கமல் அசத்தியுள்ளாராம்.

    கமல் கூறுகையில், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூப் கொடுத்த சில டிப்ஸ்களால் சண்டைக் காட்சியில் சிறப்பாக நடிக்க முடிந்தது. ஆசினும் கூட சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். ரிஸ்க் எடுக்காமல் அவரை சண்டை போட வைத்துள்ளார் ஜூப்.

    ஜூப் கடைப்பிடிப்பது போன்ற உத்திகளை நமது ஸ்டண்ட் மாஸ்டர்களும் கடைப்பிடித்தால் கை, கால் உடைவது, எலும்பு முறிவு ஏற்படுவது, உயிரிழப்பு போன்றவற்றை பெரிய அளவுக்கு தடுக்கலாம் என்றார் கமல்.

    சென்னையில் ஆரம்பித்து மலேசியா, அமெரிக்கா, பிச்சாவரம் என வளர்ந்த தசாவதாரம் தற்போது இறுதிப் பகுதிக்கு வந்துள்ளது. வசனப் பகுதிகளை முழுமையாக முடித்து விட்டனர். படத்தின் ஆடியோவை (இசை - ஹிமேஷ் ரேஷமய்யா) சென்னையில் இந்த மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    புத்தாண்டுக்கு ரசிகர்களை மகிழ்விக்க உலகெங்கும் ரிலீஸாகிறது தசாவதாரம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X