கரூர்ல 41 பேர் இறந்தும் திருந்தல.. டியூட் வெற்றி விழாவில் தடுப்பு மேடை சரிந்து பரபரப்பு.. என்ன ஆச்சு?
சென்னை: ஹீரோ வொர்ஷிப் இளம் தலைமுறையினரை எந்தளவுக்கு சீரழித்துள்ளது என்பதை கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவமே 41 உயிர்களை காவு கொடுத்து பாடம் நடத்தியும் தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் ஹீரோ வொர்ஷிப் மாயையில் இருந்து விலகியதாக தெரியவில்லை.
இந்த தீபாவளிக்கு வெளியான பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வெற்றி விழாவில் பங்கேற்றனர்.

இளைஞர்களை கவரும் விதத்தில் தொடர்ந்து சினிமா நடிகர்கள் கல்லூரிகளுக்கு சென்று சினிமா விழாக்களை நடத்தி வரும் நிலையில், ஹீரோ எடுக்கும் செல்ஃபி வீடியோவில் தங்கள் முகம் தெரிந்துவிட வேண்டும் என்கிற வெறியின் காரணமாக கோவையில் நடைபெற்ற விழாவில் தடுப்பு மேடை சரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரின் முகத்தை பார்த்துவிட துடிக்கும் இளைஞர்கள்: சாதாரண கல்லூரி மாணவர் தனது திறமையால் வளர்ந்து படம் இயக்கி, ஹீரோவாக நடித்து தொடர்ந்து 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து வரும் நிலையில், அவருக்கு ஹார்ட்கோர் ஃபேன்கள் உருவாகி வருகின்றனர். நடிகரின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், யாரையாவது மிதித்துத் தள்ளினாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு இன்றைய இளைஞர்கள் சமூகம் மாறி வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவர்களுக்கே பகுத்தறிவு இல்லையே என்கிற கேள்வி தான் எழுகிறது.
டியூட் விழாவில் பரபரப்பு: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்த டியூட் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளி வெற்றிப் படமாக மாறியுள்ளது. அந்த படத்தின் வெற்றி விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, ராம்ப்வாக் செய்த பிரதீப் ரங்கநாதன் மாணவர்களுடன் செல்ஃபி வீடியோ எடுக்க முயற்சித்தார். அப்போது, அவரது செல்ஃபி வீடியோவில் தங்கள் முகம் பதிவாக வேண்டும் என மாணவர்கள் முண்டியடித்த நிலையில், தடுப்பு மேடை விழுந்ததில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை பொறுமையாக எழுந்துக்கொள்ள சொல்லிவிட்டு அங்கே இருந்து பிரதீப் ரங்கநாதன் கிளம்பினார். பல மாணவர்கள் இந்த சம்பவத்தால் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்க: தவெக தலைவர் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக காலையில் இருந்து சோறு தண்ணி குடிக்காமல் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை காத்திருந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததை அறிந்த பின்னரும் நடிகர்களின் பின்னால் இளைஞர்கள் இப்படி வெறி பிடித்தது போல ஓடுவது ஏன் என்கிற கேள்விகளும் கல்லூரிகளில் சினிமா நிகழ்ச்சிகளை நடிகர்கள் நடத்துவது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











