»   »  ஃபியூஸ் கட்டை ரங்கசாமி

ஃபியூஸ் கட்டை ரங்கசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் வெகு அரிதாக வருவது வழக்கம். இந்த நிலையில் பிரகாஷ் ராஜ், குஷ்பு நடிக்க ஃபியூஸ் கட்டை ரங்கசாமி என்ற பெயரில் படு வித்தியாசமான ஒரு படம் உருவாகிறது.

பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார். மண்ணுக்குள் வைரம் படத்தின் மூலம் இயக்குநரானார். அதன் பின்னர் குரு பார்வை என்ற வித்தியாசமான படத்தை பிரகாஷ் ராஜை வைத்துக் கொடுத்தார். பின்னர் வானவில், சாமுண்டி, மருதுபாண்டி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்க வருகிறார் மனோஜ்குமார். பிரகாஷ் ராஜ், குஷ்பு நடிக்க உருவாகவுள்ள இப்படத்துக்கு ஃபியூஸ் கட்டை ரங்கசாமி என வித்தியாசமாக பெயரும் சூட்டியுள்ளார்.

இந்தக் கதை ஒரு உண்மைச் சம்பவமாம். தேனி மாவட்டம் கம்பம் அருகே நடந்த உண்மைக் கதையை எடுத்துக் கொண்டு படமாக்குகிறார் மனோஜ்குமார்.

படத்தின் கதை குறித்து மனோஜ்குமாரிடம் கேட்டபோது, இது ஒரு வித்தியாசமான கதை. கிட்டத்தட்ட ஆர்ட் பிலிம் கதை போலத் தெரியும். ஆனால் கமர்ஷியல் சினிமாவுக்கான கதைதான் இது.

மின் வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்தவர் ரங்கசாமி. ஓய்வுக்குப் பின்னரும் கூட தனது தொழிலை விடாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் ஃபியூஸ் போனால் சரி செய்வது என்று எப்போதும் ஃபியூஸ் கட்டையுடன் இருப்பதால் அவருக்கு ஃபியூஸ் கட்டை ரங்கசாமி என்றே பெயர்.

அவருக்கு இரண்டு பெண்கள். நடுத்தர வர்க்கத்து ஆசாமியான ரங்கசாமியும், அவரது மனைவியும் சேர்ந்து எப்படி இரு மகள்களையும் கரை சேர்க்கிறார்கள், வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

இந்தக் கதையில் பிரகாஷ் ராஜ் மட்டும்தான் நடிக்க முடியும். வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

படத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள குஷ்புவுக்கும் படத்தில் அருமையான கேரக்டர். அவரது நல்ல நடிப்பை இப்படத்தின் மூலம் ரசிகர்கள் ரசிக்கப் போகிறார்கள் என்றார் மனோஜ்குமார்.

கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், அலக்ஸ், ராஜ்கபூர் ஆகியோரும் இருக்கிறார்களாம். மணிசர்மா இசையமைக்கிறார். பா. விஜய் பாடல்களை எழுதவுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil