»   »  ஹீரோ ஆன செல்லம்

ஹீரோ ஆன செல்லம்

Subscribe to Oneindia Tamil

வில்லன், அப்பா, அண்ணன், தாத்தா என விதம் விதமாக நடித்து வந்த பிரகாஷ் ராஜ் முதல் முறையாக ஹீரோவாக மாறுகிறார்.

தனது திறமைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கன்னட திரையுலகில் தட்டுத் தடுமாறி சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பிரகாஷ் ராஜுக்கு, கே.பாலச்சந்தர் ரூபத்தில் டூயட் புதிய பாதை போட்டுக் காண்பித்தது.

பிரகாஷ் ராஜின் திறமையை புரிந்து கொண்ட தமிழ்த் திரையுலகம் படு வேகமாக அவரைத் தூக்கி விட்டது. டூயட் படத்தில் தொடங்கிய பிரகாஷ் ராஜின் நடிப்புக் கொட்டம் இன்னும் அடங்கியபாடில்லை.

விதம் விதமான கேரக்டர்களில் நடித்துக் கலக்கி வரும் பிரகாஷ் ராஜ் இப்போது தயாரிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நல்ல சில படங்களைத் தயாரித்துள்ள பிரகாஷ் ராஜ், முதல் முறையாக முழு நீள ஹீரோவாக நடிக்கிறார்.

அறை எண் 305ல் கடவுள்தான் அந்தப் படம். வடிவேலுவை ஹீரோவாகப் போட்டு களேபரமான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தைக் கொடுத்த சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஷங்கர்தான் தயாரிப்பாளர்.

முதலில் இப்படத்தின் நாயகனாக விவேக் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட்டுக்கு இணையாக அவர் சம்பளம் கேட்டதாலும், இன்ன பிற கண்டிஷன்கள் போட்டதாலும் அவரை விட்டு விட்டார் சிம்பு.

இதையடுத்து லொள்ளு சபா சந்தானத்தை ஹீரோவாகப் போடலாமா என்று யோசித்தார். இந்த நேரத்தில்தான் பிரகாஷ் ராஜ் மனதில் வர அவரையே ஹீரோவாக்கி விட்டார்.

படத்தின் கதைப்படி கடவுள் கேரக்டரில் நடிக்கிறாராம் பிரகாஷ் ராஜ். லொள்ளு சபா சந்தானமும், கஞ்சா கருப்பும் காமெடியில் கலகலக்க வைக்க வருகிறார்கள்.

வடிவேலுவை ஒரே தூக்காக தூக்கி விட்டவர் சிம்புதேவன் என்பதாலும், முதல் முறையாக வித்தியாசமான பாத்திரத்தில் நடிப்பதாலும் ரொம்ப டென்ஷனாக இருக்கிறதாம் பிரகாஷ் ராஜுக்கு.

படம் ஹிட் ஆனால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என்ற முடிவிலும் பிரகாஷ் ராஜ் இருக்கிறாராம்.

கலக்குடி செல்லம்!

Please Wait while comments are loading...