»   »  சிவாஜிக்கு கன்னட எதிர்ப்பு!

சிவாஜிக்கு கன்னட எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பு கூறியுள்ளது.

ரஜினியின் சிவாஜி படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும், கடுப்புகளும் கிளம்பியுள்ளன.

சிவாஜி படத்துக்கு அதிக ரேட் வைத்து டிக்கெட் வைத்து விற்றால் நான் சும்மா இருக்க மாட்டேன், அதை எதிர்த்துப் போராடுவேன் என விஜய டி.ராஜேந்தர் கொதித்துக் கூறியுள்ளார்.

இதேபோல பாமக தரப்பிலும் சில அண்டர்கிரவுண்ட் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன்லைட் பாட்டில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து பாமகவினர் சிலர் பேச ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு விவசாயிகள் சங்கத்தினர், சிவாஜி படத்தில் காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காவிரி என்ற பெயரை உச்சரிக்கவே ரஜினிக்கு அருகதை இல்லை. காவிரிப் பிரச்சினை தொடர்பாக வாயே திறக்காமல் மெளன சாமியாக இருக்கும் ரஜினி எப்படி காவிரியை தனது படத்தின் பாடல் வரியில் மட்டும் பயன்படுத்தலாம் என்றனர்.

இந் நிலையில் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்தே ரஜினிக்கு ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

வழக்கமாக கர்நாடக திரையுலகினர் தமிழ்ப் படங்களுக்கு தடையோ கட்டுப்பாடுகளோ போடும்போது ரஜினி படம் என்றால் விட்டுக் கொடுத்துப் போவார்கள்.

ஆனால், இம்முறை ரஜினிக்கும் சிக்கல் எழுந்துள்ளது. கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகவும், காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கன்ன ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு சிவாஜியை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் நாராயணன கெளடா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் கர்நாடகம் பாலைவனமாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்ேடாம். அதேபோல கர்நாடகத்தில் ஒரு தமிழ்ப் படத்தையும் திரையிட அனுமதிக்க மாட்டோம். அது ரஜினி படமாகவே இருந்தாலும் சரி. சிவாஜி உள்பட எந்த்த தமிழ்ப் படத்தையும் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் எந்த ஊரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வாபஸ் பெற வேண்டும். அதுவரை தமிழ்ப் படங்களுக்கு அனுமதி கிடையாது. பெங்களூர், மைசூரில் சிலர் சிவாஜியை திரையிட முயற்சிப்பதாக அறிகிறோம். ஆனால் அப்படி நடந்தால் அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கெளடா.

சிவாஜிக்கு கர்நாடகத்தில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பால் ஏவி.எம். நிறுவனம் குழம்பிப் போயுள்ளது. இந்தப் படத்தின் கர்நாடக திரையிடும் உரிமைக்காக கன்னட விநியோகஸ்தர்கள் ரூ. 15 கோடி வரை விலை பேசியுள்ளனர். ஆனால் ஏவி.எம் நிறுவனம் அதற்கு மேல் மிகப் பெரிய விலையை சொல்லி வருகிறதாம்.

சந்திரமுகி மூலம் கர்நாடக விநியோகஸ்தர்களுக்கு ரூ. 11 கோடி லாபம் கிடைத்தது. சிவாஜி மூலம் இதை விட அதிக லாபம் பார்த்து விடலாம் என அவர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால் கன்னட அமைப்புகளால் அதற்கு பிரச்சனை வந்துள்ளது.

சிவாஜிக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு ரஜினிக்கான எதிர்ப்பு அல்ல, தமிழ் மீதான தமிழர்கள் மீதான எதிர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதை தமிழ் சினிமாக்காரர்கள் புரிந்து கொண்டு, கொஞ்சமாச்சும் தமிழ் உணர்வு பெற்று, ஏதாவது சூடான நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil