»   »  சிவாஜி-சாதனைச் சிதறல்கள்

சிவாஜி-சாதனைச் சிதறல்கள்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படம் நாளொரு சாதனையும், பொழுதொரு சரித்திரமும் படைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த சாதனை மலையிலிருந்து சில சிதறல்கள் ..

சிவாஜியின் மொத்த பட்ஜெட் ரூ. 85 கோடியாம் (ஏவி.எம். நிறுவனே இதை அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது). நாட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இதுதான் என்கிறார்கள்.

சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றுள்ள அபிராமி ராமநாதன், ரூ. 6.75 கோடி விலை கொடுத்து சிவாஜியை வாங்கியுள்ளார். ஒரு நகரத்திற்கு மட்டும் ஒரு படத்திற்கு அதிக விலை கொடுக்கப்பட்டது சிவாஜிக்கு மட்டும்தானாம்.

சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலும் சாதனைதான். முதல் நாளிலேயே சென்னை நகரில் மட்டும் ரூ. 1.70 கோடியை வசூலித்துள்ளது சிவாஜி. இது வெறும் 17 தியேட்டர்களுக்கான டிக்கெட் முன்பதிவுதான். இதுவும் இந்திய அளவில் புதிய சாதனையாம்.

சிவாஜியின் இந்த சாதனைகள் குறித்து அபிராமி ராமநாதன் கூறுகையில்,

இந்திய சினிமா வரலாற்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் இந்த அளவுக்கு வசூலானது இதுவே முதல் முறையாகும். வேறு எந்தப் படத்திற்கும் இந்த அளவுக்கு வசூலானதில்லை. இதை மிகப் பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம்.

இந்த சாதனையில் எந்த அரசியலும் இல்லை. ரசிகர்களுக்கு ரஜினி எப்போதுமே எவர்கிரீன் தலைவர். அவரது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வமே இந்த சாதனைக்குக் காரணம்.

டிக்கெட் முன்பதிவின்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து கொண்டு, டிக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டதற்காக ரஜினி ரசிகர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சினிமாவைப் பொருத்தவரை சென்னை நகர விநியோக பகுதிகள் அசோக் நகரிலிருந்து திருவொற்றியூர் வரை வருகிறது. ஆனால் சென்னை நகரின் முக்கியப் பகுதிகளான பெரம்பூர், அடையார் போன்றவை சென்னை நகர எல்லைக்குள் இல்லை.

சென்னை நகரில் 17 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. தெலுங்குப் பதிப்பு காசினோ தியேட்டரில் திரையிடப்படுகிறது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் புதிய படங்களை ஆறு அல்லது 7 தியேட்டர்களில் திரையிடுவார்கள்.

ஆனால் சிவாஜி இதில் விதி விலக்கு என்பதால், அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு படம், ஒரு நகரில் அதிகபட்ச தியேட்டர்களில் வெளியிடப்படுவதும் இதுவே முதல் முறை. மக்கள் வசதிக்காகவே அதிக தியேட்டர்களில் திரையிடுகிறோம்.

படத்தின் சிட்டி உரிமைக்காக நான் அதிக தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. என்னால் முடிந்த தொகையை, நியாயமான தொகையத்தான் நான் கொடுத்துள்ளேன்.

சென்னை நகரில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் வசித்து வருகின்றனர். அதில் 30 லட்சம் பேர் வந்து பார்த்தால் கூட அது பெரும் லாபம்தான். இது எனது சாதாரண கணக்கு என்றார் ராமநாதன்.

அபிராமி கணக்கு தப்பினாலும் சிவாஜி கணக்கு தப்பாது சார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil