»   »  சென்னை 600028ல் ரஜினி!

சென்னை 600028ல் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

உலகமே சிவாஜியைப் பார்த்து வியந்து கொண்டுள்ள நிலையில், அதன் நாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முற்றிலும் புதியவர்கள் நடித்து வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சென்னை 600028 படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.

ரஜினி தனது படத்தில் பேசிய வசனம் இது, சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது. இதை சொல்லியதோடு மட்டுமல்லாமல் நிஜத்திலும் செயல்படுத்தி அசத்துபவர் ரஜினி.

சென்னை 600028 என்ற பெயரில் கங்கை அமரனின் புதல்வன் வெங்கட் பிரபு இயக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாகி வெற்றிகரமாக ஓடி வரும் படத்தை ரஜினி தனது குடும்பத்தோடு போய் பார்த்து ரசித்துள்ளார்.

சென்னை ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் ரஜினிக்காக இப்படத்தை விசேஷமாக திரையிட்டனர். ரஜினி தனது மனைவி லதா, மகள் செளந்தர்யா ஆகியோருடன் சென்று இப்படத்தைப் பார்த்தார்.

ரஜினியை வெங்கட் பிரபுவும், அவரது சகோதரரும், சென்னை 600028 படத்தில் காமெடியில் கலக்கியிருந்த பிரேம்ஜியும் இன்ப அதிர்ச்சி நீங்காத நிலையில் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

படம் வெளியாகி 2 மாதங்களாகி விட்டபோதிலும், இந்தப் படத்தைப் பார்க்க நேரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாராம் ரஜினி. சிவாஜி வெளியாகி இப்போதுதான் தலைவர் ரிலாக்ஸ்டாகியுள்ளதால் இப்போதுதான் படம் பார்க்க முடிந்ததாம்.

சென்னை 600028 வெளியானபோது பிரிவியூ ஷோவுக்கு ரஜினியை அழைத்திருந்தார் வெங்கட் பிரபு. அப்போது சிவாஜி ஷூட்டிங் படு உச்சத்தில் இருந்த நேரம். மேலும் இமயமலை திட்டமும் ரஜினியிடம் இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

ஆனால் சிவாஜி வெளியான பின்னர் கண்டிப்பாக படம் பார்க்க வருவதாக உறுதியளித்திருந்தார் ரஜினி. சொன்னபடியே இப்போது வந்து படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.

சொன்ன வாக்கை காப்பாற்றிய ரஜினியின் செயலை நினைத்து வெங்கட்பிரபுவும், பட யூனிட்டும் ரொம்ப குஷியாகி விட்டார்களாம். படம் குறித்து ரஜினி என்ன சொன்னார் என்று வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, ரஜினி சார் ஒரு லிவிங் லிஜென்ட்.

அவர் எனது முதல் படத்தை பார்த்து ரசித்தது எனக்குப் பெரும் கெளரவம். என்னையும், எனது யூனிட்டாரையும் தலைவர் பாராட்டினார். இதுபோல நல்ல படங்களை தொடர்ந்து கொடுங்கள் என்று உற்சாகமாக கூறினார்.

படத்தில் பிரேம்ஜியின் காமெடி அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அவரை வெகுவாகவே பாராட்டினார் என்றார். பக்கத்தில் நின்றிருந்த பிரேம்ஜிக்கு முகம் பூராவும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil