»   »  ரஜினியால் கலங்கிய விமான நிலையம்

ரஜினியால் கலங்கிய விமான நிலையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்துக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விமான நிலைய ஊழியர்கள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்கியதாலும், புகைப்படத்திற்கு முண்டியடித்ததாலும், விமான நிலைய பணிகள் பாதிக்கப்பட்டன.

ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தின் ஷூட்டிங் ஹாலந்து மற்றும் பிரேசில் நாடுகளில் நடக்கிறது. இதில் கலந்து கொள்கிறார் ரஜினி. இதற்காக நேற்று அதிகாலை அவர் லண்டன் கிளம்பிச் சென்றார்.

லண்டன் விமானத்தைப் பிடிப்பதற்காக அதிகாலை 12.30 மணிக்கு மனைவி லதாவுடன் விமான நிலையம் வந்தார் ரஜினி. படு சாதாரணமாக, ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட்டில் இருந்தார் ரஜினி.

இதனால் அவரை முதலில் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் சிலர் ரஜினியை அடையாளம் கண்டு கொண்டதால் இன்ப அதிர்ச்சியில் அவரிடம் ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் மற்றவர்களும் ஓடி வந்தனர்.

அந்த சமயத்தில் ரஜினி விசா சோதனை மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கான கவுண்டரில் நின்று கொண்டிருந்தார். ரஜினியை ரசிகர்கள் மொய்ப்பதைப் பார்த்து விட்டு விமான நிலைய ஊழியர்களும் தங்களது பணிகளை விட்டு விட்டு ஓடி வந்தனர்.

சிறிது நேரத்தில் ரஜினியைப் பார்க்க கிட்டத்தட்ட அத்தனை விமான நிலைய ஊழியர்களும் ஓடி வந்து விட்டனர். ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் வெள்ளத்தில் மிதந்த ரஜினிகாந்த், அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். புன்னகையுடன் போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்தார்.

விமான நிலைய ஊழியர்கள் ரஜினியைப் பார்க்கப் போய் விட்டதால் பணிகள் பாதித்தன. பயணிகளின் உடமைகளை சரி பார்க்கும் பணி, டிராலிகளை அனுப்பும் பணி உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளும் அதிருப்தி அடைந்தனர். கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்தனர்.

இதையடுத்து விமான நிலைய மேலாளர் விரைந்து வந்து என்ன நடந்தது என்று கேட்டார். அப்போதுதான் ரஜினியைப் பார்க்க ஊழியர்கள் போய் விட்ட தகவல் அவருக்குத் தெரிந்தது.

இதையடுத்து ரஜினி இருந்த இடத்திற்கு மேலாளர் ஓடினார். அங்கிருந்த விமான நிலைய ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அவர் கூறினார். ரஜினியும், அவர்களிடம் போட்டோ எடுத்தாச்சுல்ல, இனிமே உங்கள வேலையைப் பார்க்கணும், அதுதான் முக்கியம் என்று கூறி விமான நிலைய ஊழியர்களை புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

அனைவரும் அகன்ற பின்னரே ரஜினியால் விமானத்துக்குப் போக முடிந்தது.

லண்டனில் இருந்து ஹாலந்து சென்றுவிட்டு அங்கிருந்து பிரேசில் போகும் ரஜினி சூட்டிங் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு 2 வாரம் அமெரிக்காவில் ரெஸ்ட் எடுக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil