»   »  மீண்டும் சூப்பர் ஸ்டார் - கே.எஸ்.ஆர்?

மீண்டும் சூப்பர் ஸ்டார் - கே.எஸ்.ஆர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் மீண்டும் இணைவார்கள் என்ற பேச்சு கோலிவுட்டில் பலமாக எழுந்துள்ளது.

சிவாஜியைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யாரு என்ற கேள்வி கோலிவுட்டை ரவுண்டடித்துக் கொண்டுள்ளது. அவர், இவர் என்று பலரது பெயர்களும் பேசப்படுகிறது.

தற்போது ரஜினி, தனது மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டுள்ளார். பிரேசிலில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதன் பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வெடுக்கவுள்ளார். அதை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில்தான் ஊர் திரும்புகிறார். அதன் பிறகே தனது அடுத்த படம் குறித்த முடிவை ரஜினி எடுப்பார் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ரஜினியால் அன்புடன் பாஸ் என அழைக்கப்படுபவரும், ரஜினியை வைத்து முத்து, படையப்பா என இரு பெரும் படங்களைக் கொடுத்தவருமான கே.எஸ்.ரவிக்குமாரே, ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி படு பலமாக ரவுண்டு வர ஆரம்பித்துள்ளது.

ரஜினியிடம் ஒரு கதையின் ஒன்லைனைக் கூறியுள்ளாராம் ரவிக்குமார். அது ரஜினிக்கும் பிடித்துப் போய் விட்டதாம். கமல்ஹாசனின் தசாவதாரத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் ரவிக்குமார். அதை முடித்து விட்டு வந்த பின்னர் அவரும், ரஜினியும் உட்கார்ந்து பேசவுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபா வந்து ரஜினியைப் புரட்டிப் போட்டது. அப்போது ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் என்ற படம் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் அமர்ந்திருப்பது போல விளம்பரங்கள் கூட வந்தது.

ஆனால் என்ன காரணத்தாலோ ஜக்குபாய் வளரவே இல்லை, அப்படியே முடங்கிப் போனது அத்திட்டம். ஆனால், சந்திரமுகிக்குப் போய் விட்டார் ரஜினி. பி.வாசுவுக்கு வாய்ப்பளித்தார். இதனால் ரவிக்குமார் கூட வருத்தத்தில் இருந்தார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜக்கு பாய் சோகத்தைத் துடைக்கும் வகையில், புதிய படத்தை ரஜினி, ரவிக்குமாருக்குக் கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பதையும் கூட ரஜினி முடிவு செய்து விட்டார் என்கிறார்கள். அதாவது ரஜினியை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர், வளர்த்து விட்ட பஞ்சு அருணாச்சலம் ஆகிய இருவரும் கூட்டாக இப்படத்தைத் தயாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil