»   »  'ரோபோட்'டில் ரஜினி?

'ரோபோட்'டில் ரஜினி?

Subscribe to Oneindia Tamil
Rajini
ஷங்கரின் கனவுப் படமான ரோபோட்டில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை ஷங்கரின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ரூ. 100 கோடி பட்ஜெட்டைப் போட்டு வைத்து ரோபோட் படக் கதையுடன், 'ஆள்' கிடைக்காமல் ரொம்ப நாளாகவே ஷங்கர் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.

முதலில் இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திடீரென கமல் கழன்று கொண்டு விட்டார்.

இதையடுத்து ரோபோட்டை கிடப்பில் போட்டு விட்டார் ஷங்கர். இடையில் அந்நியன், பிறகு சிவாஜி என இரு பெரும் படங்களை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தார்.

சிவாஜியை முடித்த கையோடு மீண்டும் ரோபோட்டை கையில் எடுத்த ஷங்கர் இந்த முறை ஷாருக்கானை அணுகினார். அவரும் ஆர்வமாகி நடிக்க ஒப்புக் கொண்டார். அத்தோடு நில்லாமல் படத்தையும் தயாரிக்க முன்வந்தார்.

எல்லாம் கை கூடி வந்த நிலையில், திடீரென ஷாருக்கானும் படத்திலிருந்து விலகிக் கொண்டார். நானும், ஷங்கரும் நட்போடு பிரிந்து விட்டோம் என்றும் அறிவித்தார்.

இதனால் அப்செட் ஆன ஷங்கர், அடுத்ததாக அஜீத்தை அணுகினார். இதை அஜீத்தே உறுதிப்படுத்தினார். ரோபோட் குறித்து ஷங்கருடன் விவாதித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு இதில் பாலோஅப் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் திடீரென ரஜினியின் பெயர் இதில் அடிபட ஆரம்பித்துள்ளது. ஷங்கரின் ரோபோட் படத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் படத் தயாரிப்புப் பிரிவான ஆட்லேப்ஸ் இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கப் போவதாகவும், இதுதொடர்பாக ஷங்கர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த செய்தியை உறுதிப்படுத்த யாரும் முன்வரவில்லை. இயக்குநர் ஷங்கரின் செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து கேட்டபோது முதலில் சிரித்தார். பிறகு, இப்படி ஒரு திட்டம் ஷங்கர் சாரிடம் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி இப்படி ஒரு செய்தி வந்தது என்று தெரியவில்லை என்றார்.

மேலும் ஆட்லேப்ஸ் நிறுவனத்தின் சென்னைக் கிளையும் கூட இந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil