»   »  விமர்சனம் பண்ணுங்க... ஆனா அடுத்தவர் மனசு நோகாம பண்ணுங்க! - ரஜினிகாந்த்

விமர்சனம் பண்ணுங்க... ஆனா அடுத்தவர் மனசு நோகாம பண்ணுங்க! - ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். ஆனால் அடுத்தவர் மனசு நோகாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

விக்ரம் பிரபு முதல் முறையாக தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் நெருப்புடா.
இந்தத் தலைப்பு ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பஞ்ச் என்பதால், ரஜினியையே படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.


Rajinikanth's appeal to media

சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்தில் நடந்த இந்த விழாவில் படப் பாடலை வெளியிட்டு ரஜினி பேசுகையில், "இந்த அன்னை இல்லம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த வீட்டுக்கு வந்த உடனே நான் நினைச்சேன்... சிவாஜி சார் மட்டும் இப்போ என்னைப் பாத்திருந்தா, 'என்னடா போட்டிக்கு தாடி வச்சிட்டியா'ன்னு கேட்டிருப்பார். அவருக்கு போட்டியே இல்ல. இனிமேலும் கிடையாது.


நான் முதன் முதலில் 1978-ல் என்று நினைக்கிறேன்.. அப்போதுதான் நான் வாழ வைப்பேன் படத்தில் அவருடன் நடித்தேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். 'ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா.. பிரியாணி போடறேன்...' என்றார். நானும் சென்றேன். முதன் முதலாக அந்த வீட்டு வாயிலில் நுழைந்தபோது, அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வியந்தேன்.


Rajinikanth's appeal to media

உள்ளே போய் பார்த்தேன். ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கோ வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த 200 பேர் வந்திருந்தார்கள். பிரியாணி என்றால்.. அப்படி ஒரு பிரியாணி.. இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அங்கு நடக்கும்.


Rajinikanth's appeal to media

இரண்டாவது நிகழ்வு, அண்ணாமலை படம். நான் சிவாஜி சாரின் ரசிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தில் ஒரு பகுதியில் என் கேரக்டரை சிவாஜி சாரை மனதில் வைத்து உருவாக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. படம் முடித்து சிவாஜிக்கு தியேட்டரில் போட்டுக் காட்டினோம். அவர் தியேட்டரில் பார்த்தது ஒன்று அண்ணாமலை. அடுத்து படையப்பா. அவர் நடிச்ச படம்.


அண்ணாமலை பார்த்துவிட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து சிவாஜி சார் பாராட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.


பிரபு மிக அருமையான நண்பர். ஏவிஎம்ல நான் ஷூட்டிங்ல இருந்தபோது என்னை அவர் பார்த்தார். அப்போது அவர் 20 வயசு பையன். இப்போ அவர் தாத்தாவாயிட்டார்.


Rajinikanth's appeal to media

காலம் எப்படி ஓடுது... 80 சதவீத வாழ்க்கை முடிஞ்சிடுச்சி... இன்னும் 20 சதவீதம்தான். அந்த காலமும் இப்படியே ஓடிடனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.


திரையுலகம் பத்தி நம்ம விஷால் ஒரு கோரிக்கை வைத்தார் மீடியாவுக்கு. அர்த்தமுள்ள கோரிக்கை அது. நானும் அதை ஆமோதிக்கிறேன். மீடியாக்களும் இதப் பத்தி சீரியஸா யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன். படம் எடுப்பது எங்களுடைய வேலை, பொறுப்பு, கடமை. அதை விமர்சிக்கிறது உங்க உரிமை.


ஆனா அந்த விமர்சனம் எப்படி இருக்கணும்ங்கறது... அதாவது சொல்லும் முறை முக்கியம்.


ஒருத்தரை வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூப்பிட்டுட்டு, 'சாப்பிடுங்க... நல்லா சாப்பிடுங்க' என்று கூறுவது வேறு. 'சாாப்ப்டு.. நல்ல்ல்லா சாப்பிடு' என்பதற்கும் வித்தியாசம் இருக்கல்லவா. ஒரே விஷயம்தான். ஆனால் சொல்லும் முறை என ஒன்றிருக்கிறது.


விமர்சனம் பண்ணுங்க.. ஆனா அடுத்தவர் மனசு நோகாம, வார்த்தைகளை சரியா பயன்படுத்துங்க," என்றார்.

English summary
Superstar Rajiikanth appealed media not to hurt any one in the name of criticism and use polite words for criticisms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil