»   »  ரஜினியின் 'குசேலர்'!

ரஜினியின் 'குசேலர்'!

Subscribe to Oneindia Tamil
Rajini

மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தான் இப்படத்தை தெலுங்கில் தயாரிக்கிறது), கத பறயும்போல் படத்தின் திரைக்கதை ஆசிரியும், நடிகருமான சீனிவாசன், மலையாள நடிக்ர முகேஷ் (நடிகை சரிதாவின் முன்னாள் கணவர்) ஆகியோரும் உடனிருந்தனர்.

வாசு கூறுகையில், இது மலையாள ரீமேக் படம் என்றாலும் கூட, படத்தின் திரைக்கதையில் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப பெருமளவில் மாற்றம் செய்யவுள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

தமிழில் இப்படத்துக்கு குசேலர் என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளோம். இருப்பினும் பெயர் மாறலாம். தெலுங்கில் இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கி ஜூன் மாதத்தில் முடியும். ஆகஸ்ட் மத்தியில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

டிசம்பர் 31ம் தேதி கத பறயும் போல் படத்தை சென்னையில் பார்த்தேன். சீனிவாசன் எனக்காக திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்ததுமே, இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். உடனே ரஜினிகாந்திடம் தொடர்புகொண்டு என் விருப்பத்தை சொன்னேன்.

மறுநாள், அவர் படத்தை பார்த்தார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்று சொன்னார். படத்தின் கதை, அவரை அந்தளவுக்கு பாதித்து இருந்தது. இதையடுத்து அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதித்தார்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில், அவர் விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. இந்த படத்தில் அவர் நடிப்பது, கெளரவ வேடம் அல்ல. முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் படத்துக்காக, திரைக்கதை மாற்றி அமைக்கப்படுகிறது.

மணிச்சித்ரதாழ் படத்தை ரஜினிக்காக நான் ரீமேக் செய்ய முயன்றபோது அது அப்படியே ரீமேக் செய்யப்படும் படம் என்றுதான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரிஜினலை விட சந்திரமுகி பெரும் மாற்றங்களுடன் வெளிவந்தது.

அதேபோல குசேலரும் இருக்கும். நிச்சயம் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமையும். விருந்து படைக்கும் வகையில் இப்படம் இருக்கும்.

விரைவில் படத்தின் பிற கலைஞர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றார்.

பசுபதி ஜோடியாக சிம்ரன்:

இப்படத்தில் ரஜினிகாந்த் ஏழை நண்பனாக பசுபதி நடிக்கிறார். கிட்டத்தட்ட ரஜினிக்கு நிகரான கேரக்டர் இவருக்கு.

ஒரிஜினல் படத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. ஆனால் தமிழில் ரஜினிக்கு ஜோடி இருக்கிறாராம்.

முதலில் நயனதாராவின் பெயர் இந்த கேரக்டருக்கு அடிபட்டது. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஈஸியாக பிரபலமாகக் கூடிய வகையிலான ஒரு கவர்ச்சிகரமான நாயகியாக இருந்தால் நலம் என வாசு நினைக்கிறாராம். அனேகமாக பாலிவுட் நடிகை யாராவது இதில் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

மேலும், மலையாளத்தில் சீனிவாசனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அவரே இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மீனாவுக்குப் பதில் பசுபதியின் ஜோடியாக சிம்ரனை நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகா நடித்த வேடத்தில் புக் செய்யப்பட்டவர் சிம்ரன்தான். ஓரிரு காட்சிகளிலும் நடித்தார். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் தொடர்ந்து நடிக்காமல் விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் பசுபதியின் ஜோடியாக நடிக்க சிம்ரனை வாசு தேர்வு செய்துள்ளாராம்.

படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் குமாரை புக் செய்துள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil