Ravi Mohan Studios: சிங்கத்தின் மேல் கமலை ஏற்றி அழகு பார்த்த ரவி மோகன்.. புதிய தொடக்கம் இன்று!
சென்னை: ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவியை ரசிகர்கள் அன்புடன் ஜெயம் ரவி என்றே பல ஆண்டுகளாக அழைத்து வந்தனர். திடீரென தன்னை இனிமேல் ரவி மோகன் என அழைத்தால் நல்லா இருக்கும் என அவர் கேட்டுக் கொண்ட நிலையில், தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். அதன் அறிமுக விழாவை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் இன்று பிரம்மாண்டமாக நடத்த உள்ள நிலையில், அதற்காக பல திரையுலக பிரபலங்களை அவர் அழைத்துள்ளார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று அழைப்பு விடுத்த வீடியோவை ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். அதே போல நடிகர் கார்த்தியையும் அவர் வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்த காட்சிகளும் வெளியாகி உள்ளன.

நடிகை ஜெனிலியா மும்பையில் இருந்து தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
ரீமேக் ஹீரோ இமேஜ் உடைப்பு: அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படம் நடிகர் ரவியை தமிழ் சினிமாவுக்கு ஜெயம் ரவியாக அறிமுகப்படுத்தியது. உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், மழை என பல படங்களை ரீமேக் செய்து நடித்து ரீமேக் ஹீரோவாக பிரபலமான ஜெயம் ரவி அதனை உடைக்க வேண்டும் என நினைத்து அண்ணன் இயக்கத்தில் புதிய கதையான தனி ஒருவன் படத்தில் நடித்து தூள் கிளப்பினார். அந்த படத்தை தெலுங்கில் ராம்சரண் ரீமேக் செய்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தி ரவியுடன் விவாகரத்து: ஆர்த்தியை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு மகன்களை பெற்றெடுத்து பல வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரவி மோகன் மனக்கசப்பு காரணமாக ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கெனிஷாவுடன் நெருக்கம்: பாடகி கெனிஷாவுடன் நட்பாக பழகி வருவதாக ரவி மோகன் சொல்லி வந்தாலும், இருவரும் ஒன்றாக ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டது முதல் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவது உறுதியாகி விட்டது. மேலும், நேற்று திருப்பதிக்கும் கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக சென்று சாமி தரிசனம் செய்தார். விரைவில் கெனிஷாவை திருமணம் செய்துக் கொள்ளப்போகும் அறிவிப்பையும் அவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் ஓபனிங் நிகழ்ச்சியில் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
சிங்கத்தின் மேல் கமல்: ரவி மோகன் ஸ்டூடியோஸ் ஆரம்ப நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கமல்ஹாசனை அவரது வீட்டுக்கே சென்று நேரில் அழைப்பு விடுத்த ரவி மோகன் சிங்கத்தின் மேல் அமர்ந்து கமல் சவாரி செய்வது போன்ற புகைப்படம் ஒன்றையும் அன்பு பரிசாக வழங்கி ஆண்டவரை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டார்.
வந்தியத்தேவனுக்கு அழைப்பு: நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தியையும் நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாகவே தொடர்கின்றனர்.
ஹாசினி வருகை: மும்பையில் இருந்து தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியாவும் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார். மேலும், பல திரையுலக பிரபலங்களும் ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் பங்கேற்க வருகின்றனர். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல புதிய படங்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











