»   »  மீண்டும் வாசு இயக்கத்தில் ரஜினி!

மீண்டும் வாசு இயக்கத்தில் ரஜினி!

Subscribe to Oneindia Tamil
Rajini

ஷங்கரின் ரோபோட் படத்தில் நடிப்பதற்கு முன்பாக பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கே.பாலச்சந்தர் தயாரிக்கவுள்ளார்.

சிவாஜியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள மெகா பட்ஜெட் படம் ஷங்கரின் ரோபோட். இந்தப் படத்தை ரூ. 120 கோடி செலவில் எடுக்கவுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்னதாக ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தனது குரு கே.பாலச்சந்தருக்காக நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. பாலச்சந்தர் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை பி.வாசு இயக்கவுள்ளார்.

வாசுவும், ரஜினியும் சேர்ந்து ஏற்கனவே நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். லேட்டஸ்டாக அவர்கள் கொடுத்த மகாஹிட் சந்திரமுகி என்பது நினைவிருக்கும்.

வாசு இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கப் போகும் படம், மலையாளத்தில் வெற்றி பெற்ற கத பரயும்போல் படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸானது. இப்படத்தில் மம்முட்டி, சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க சென்டிமென்டல் காமெடிப் படமான இப்படம், கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளிக்கும், சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவருக்கும் இடையே மலரும் நட்பைப் பற்றியதாகும்.

இப்படம் கேரளாவில் பெரும் ஹிட் ஆனது. பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் கதையை வாங்க பிரம்மப் பிரயத்தனம் செய்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் சீனிவாசன், ரஜினிக்காக போர் பிரேம்ஸ் தியேட்டரில் படத்தைப் போட்டுக் காண்பித்தார். படத்தைப் பார்த்ததும், சீனிவாசனைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினாராம். இப்படத்தை தமிழில் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறினாராம். பின்னர் சீனிவாசனை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து நீண்ட நேரம் பேசினாராம்.

இதையடுத்து தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உறுதி ஆகி விட்டது. ரஜினி சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்க, அவருடைய கிராமத்து தோழர் வேடத்தில் பசுபதி நடிக்கவுள்ளாராம். வாசு படத்தை இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

படத்தின் டைட்டில் உள்ளிட்ட பிற விவரங்கள் இந்த வார இறுதிக்குள் முடிவாகவுள்ளதாம்.

படத்தை உடனடியாக ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன் பின்னரே ரஜினி ரோபோட் ஆகவுள்ளார்.

கொசுறு சீனிவாசன் மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த திரைக்கதாசிரியர் ஆவார். இவரது பூர்வீகம் தர்மபுரி என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. மேலும், ரஜினி சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தபோது சீனிவாசன் அவருக்கு ஜூனியர் என்பதும் இன்னொரு குட்டிச் செய்தி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil