பொங்கல் ரிலீஸ் ரேஸ் ...வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம்
சென்னை : போனி கபூர் தயாரிப்பில், ஹச்.வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள படம் வலிமை. அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், தற்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் பொங்கல் ரேஸில் பீஸ்ட் இருக்கா, இல்லையா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.

ஜனவரி 7 ல் ஆர்ஆர்ஆர்
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படமும் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்
ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா காரணமாக பலமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இதற்கு முன் அக்டோபர் 13 ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம்.

இது தான் காரணமா
ஐதராபாத்தில் நடந்து வரும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விரைவில் நிறைவடைய உள்ளதாம். இதனால் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

புதிய போஸ்டர்
அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படம் 1920 களில் நடந்த நட்பை அடிப்படையாகக் கொண்ட கதையாம். இந்த படத்தில் ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

வலிமையுடன் மோதும் ஆர்ஆர்ஆர்
இதனால் அஜித்தின் வலிமை படத்துடன், ஆர்ஆர்ஆர் படம் மோதிக் கொள்ள உள்ளது உறுதியாகி உள்ளது. பொங்கல் ரேஸில் விஜய்யின் பீஸ்ட் படமும் இணையும் பட்சத்தில் விறுவிறுப்பு அதிகரிக்கும். இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











