»   »  சபரிக்கு மீண்டும் சிக்கல்!

சபரிக்கு மீண்டும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சுரேஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்துள்ள வித்தியாசமான படம் சபரி. டாக்டராக வரும் விஜயகாந்த், இதில் மருத்துவ உலகில் நடைபெறும் அவலங்களை அவருக்கே உரிய அதிரடி பாணியில் கண்டுபிடித்துத் தவறு செய்பவர்களை துவம்சம் செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கே வர வேண்டியது. ஆனால் பொங்கலுக்கு போக்கிரி உள்ளிட்ட படங்கள் வெளியானதால் படத்தைத் தள்ளிப் போட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் விரும்பினார். இதனால் பொங்கலுக்குப் படம் வரவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகிறது என்று உறுதியாக தெரிவித்தார். படம் தொடர்பாக நிலவிய பல்வேறு சர்ச்சைகள் நீங்கி விட்டதாகவும் வெள்ளிக்கிழமை படம் கண்டிப்பாக திரைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு நில்லாமல் படம் குறித்த விளம்பரத்தையும் முடுக்கி விட்டார். தியேட்டர்களில் முன்பதிவும் தொடங்கியது. நகரெங்கும் பிரம்மாண்ட போஸ்டர்கள், தியேட்டர்களில் கட் அவுட்கள் சபரி களை கட்டத் தொடங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகமல் தள்ளிப் போடப்பட்டு விட்டது.

சொன்னது போல தியேட்டர்களுக்குப் பொட்டி வந்து ேசரவில்லை. சில கலைஞர்களுக்கு சம்பளப் பாக்கி உள்ளாம். அதுதவிர பிரிண்ட் போட்ட பணத்தைக் கூட செட்டில் பண்ணாமல் உள்ளதாம். இதுதவிர மேலும் சில பிரச்சினைகளும் உள்ளதால், படத்தை கடைசி நேரத்தில் தள்ளிப் போட்டு விட்டாராம் சந்திரசேகரன்.

இதுதவிர சந்திரசேகரன் சொன்ன விலைக்கு விநியோகஸ்தர்களும் கூட அதிருப்தியாகி உள்ளனராம். இதனால்தான் கடைசி நேரத்தில் படத்தை ஒத்தி வைத்து விட்டார்களாம்.

படத்தை திரையிடுவது தொடர்பாக வியாழக்கிழமை இரவு விடிய விடிய தயாரிப்பாளர் சங்கத்தில் சூடான விவாதம் நடந்துள்ளது. சமரச முயற்சிகள் படு தீவிரமாக நடந்ததாம். ஆனால் தீர்வுதான் கிடைக்கவில்லையாம். படம் எப்போது திரைக்கு வரும் என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.

விஜயகாந்த் படம் ரிலீஸாவதில் பிரச்சினை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கஜேந்திரா, பேரரசு, தர்மபுரி ஆகிய படங்கள் பஞ்சாயத்தில் சிக்கி தவித்தன.

இதில் பேரரசு படம் 13 முறை ஒத்திவைக்கப்பட்டு புதிய சாதனையே படைத்தது.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரின் படத்துக்கே பஞ்சாயத்தா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil