வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரைலருக்கு ஏக வரவேற்பு.. குஷியில் 'ஹீரோ' சந்தானம்!
சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் ட்ரைலருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
சந்தானம் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான்.
ஆனாலும் இந்தப் படத்தை முக்கியமாகக் கருதுகிறார். இந்தப் படம் நன்றாக ஓடினால், இனி காமெடி வேடங்களில் நடிப்பதே இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.

ஆஷ்னா சாவேரி
இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தார்த் இசையமைக்கிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது.

பயிற்சி
இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடை குறைப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் மாறியுள்ளார். மேலும் நடனம், சண்டை, சைக்கிள் சாகஸம் என ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆடியோ ரிலீஸ்
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் முன்னோட்டம் ஏராளமான ரசிகர்களுக்கு மத்தியில் வெளியானது. அப்போது எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் தேவையில்லை. என்னை மட்டுமே நான் நம்புகிறேன் என்றெல்லாம் பேசியிருந்தார் சந்தானம்.

வரவேற்பு
சந்தானத்தின் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் பட ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பில் 5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்கள் இந்த ட்ரைலரைப் பார்த்திருப்பது திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்தானம் குஷி
இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு சந்தானத்தை ஏகக் குஷிப்படுத்தியுள்ளது. மேலும் இனி நடித்தால் நாயகன்தான் என்ற தன் முடிவு சரியானதுதான் என நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











