»   »  வெங்கடேச பண்ணையார் சரவணன்!

வெங்கடேச பண்ணையார் சரவணன்!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் மூலம் மறு பிறவி எடுத்த சரவணன், மூலக்கரை பண்ணையார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

விஜயகாந்த்தின் ஜெராக்ஸ் பிரதியாக ஒரு நேரத்தில் கருதப்பட்டவர் சரவணன். விஜயகாந்த்தைப் போன்ற தோற்றத்தில் இருந்ததால் படு வேகமாக முன்னேறினார். பல படங்களில் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தார்.

நல்ல திறமையுடன் இருந்தபோதிலும் கூட சரவணனால் பெரிய லெவலுக்குப் போக முடியவில்லை. காரணம் அவர் செலக்ட் செய்த சில உப்புச் சப்பில்லாத படங்கள். நந்தா படத்தில் வில்லத்தனமாக நடிக்கப் போய், சுத்தமாக வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

இடையில் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து நடித்தார் சரவணன். ஆனால் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்துள்ள படம் பருத்தி வீரன். சித்தப்பா கேரக்டரில் கலக்கலாக நடித்திருந்த சரவணனுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியே போன் செய்து வாயாராப் பாராட்டினாராம்.

இந்தப் படம் உங்களுக்கு மறு பிறவி என்றும் கூறியுள்ளார். அவர் வாய் முகூர்த்தம் பலித்ததோ என்னவே, சரவணனைத் தேடி பல பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் மிகவும் ஜாக்கிகரதையாக புதிய படங்களைத் தேர்வு செய்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார் சரவணன்.

அப்படி அவர் தேர்வு செய்துள்ள படம்தான் மூலக்கரை பண்ணையார். தென் கோடி மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் வெங்கடேச பண்ணையார். அவர் சார்ந்த நாடார் சமுதாயத்துக்கு பண்ணையார் ஒரு வள்ளல். ஆனால் காவல்துறையைப் பொருத்தவரை அவர் ஒரு டான்.

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார் பண்ணையார். இதனால் நாடார் சமுதாயத்தினரின் பெரும் அதிருப்தியை அதிமுக சம்பாதித்தது.

இதை பயன்படுத்திக் கொண்ட திமுக, பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை திமுகவில் சேர்த்து கடந்த 2004ம் ஆண்டு நடந்த எம்.பி தேர்தலில் டிக்கெட் கொடுத்து நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை அள்ளி பலன் அடைந்தது.

இந்த பண்ணையாரின் வாழ்க்கையைத்தான் இப்போது மூலக்கரை பண்ணையார் என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் சஞ்சய் ராம். ஏற்னவே தூத்துக்குடி என்ற படத்தை எடுத்தவர்தான் சஞ்சய் ராம்.

மூலக்கரை பண்ணையார் வேடத்தில் சரவணன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ராதிகா செல்வி கேரக்டரில் சோனிகா என்ற புதுமுகத்தை நடிக்க வைக்கின்றனர்.

இவர்கள் தவிர அதிசயாவும், தன்யாவும் படத்தில் உள்ளனர். புதுமுகம் அஞ்சுஷாவும் அறிமுகமாகிறார். சஞ்சய்ராமும் இப்படத்தில் பொலமாடன் என்ற முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். பண்ணையாரின் வலது கரம் போலத் திகழ்ந்தவர் இந்த பொலமாடன்.

பின்னணிப் பாடகர் தீபன் சக்கரவத்தியும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்தான் இசையமைக்கிறார். இது அவரது முதல் இசையமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. லியோ கேமராவைக் கையாளுகிறார்.

உப்பு நகரம், முத்து நகரம் என செல்லமாக அழைக்கப்படும் தூத்துக்குடியில், 24ம் தேதி பட பூஜையை வைத்துள்ளனர். தூத்துக்குடி நகரில் படம் ஒன்றுக்கு பூஜை போடப்படுவது இதுவே முதல் முறையாம்.

சஞ்சய்ராமுக்கு சொந்த ஊரே தூத்துக்குடிதான். அதனால் தான் ஊர் பாசத்தில் படப்பிடிப்பு தொடக்கவிழாவையும் அங்கேய வைத்துள்ளார். இந்தப் படத்தையும் சஞ்சய் ராமே சொந்தமாக தயாரிக்கிறார்.

வெங்கடேச பண்ணையாரின் வாழ்க்கையை படமாக்க ராதிகா செல்வியிடம் ஒப்புதல் பெற்று விட்டாராம் சஞ்சய் ராம்.

பருத்தி வீரன் மூலம் புத்துயிர் பெற்றுள்ள சரவணன், வெங்கடேச பண்ணையார் கேரக்டருக்கும் உயிர் கொடுப்பார் என்று நம்பலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil