»   »  படமாகும் பண்ணையார்

படமாகும் பண்ணையார்

Subscribe to Oneindia Tamil

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது.

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பண்ணையாரை, அவரது வீட்டில் வைத்து போலீஸார், என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நாடார் சமூகத்தினர் அதிமுக அரசுக்கு எதிராக திரும்பினர். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திமுக தங்களது பக்கம் இழுத்து தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கியது.

இந்த நிலையில் பண்ணையாரின் கதை படமாகிறது. தூத்துக்குடி படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய (இயக்கவும் ெசய்தார். ஆனால் படத்தின் நாயகன் ஹரிக்குமார் தான் இயக்கியதாக கூறினார் என்பது நினைவிருக்கலாம்) சஞ்சய்ராம்தான் பண்ணையார் படத்தையும் இயக்கப் போகிறார்.

படத்துக்கு மூலக்கரை பண்ணையார் என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் சரவணன்தான் பண்ணையாராக நடிக்கிறார். பருத்தி வீரனில் சித்தப்பாவாக வந்து கலக்கலாக நடித்ததால் இந்தப் படம் சரவணனைத் தேடி வந்துள்ளது.

சரவணன் தவிர, நடிகர் ராஜசேகரின் தம்பியும், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் மருமகனுமான நடிகர் செல்வா ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். வட்டாரம் படத்தில் அசத்திய அதிசயா, ஸ்வாதி, தன்யா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுக்கான கேரக்டர் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

புலமாடன் என்ற கேரக்டரில் சஞ்சய்ராமே நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் சஞ்சய்ராம். இதற்காக லிங்கம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சஞ்சய் ராம்.

படப்பிடிப்பு முழுவதும் நாகர்கோவில், தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil