»   »  பெரியார் 2ல் நடிக்க சத்யராஜ் ரெடி

பெரியார் 2ல் நடிக்க சத்யராஜ் ரெடி

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக சத்யராஜ் கூறியுள்ளார்.

லொள்ளு சபா தலைவரான சத்யராஜ், தான் நடித்த அத்தனை படங்களிலும் லொள்ளுத்தனம் இல்லாமல் நடித்ததே இல்லை. சீரியஸான கேரக்டரைக் கூட தனது குறும்புத்தனத்தால் கலகலக்க வைத்து விடுவார்.

அப்படிப்பட்ட அசகாய சூர நடிகரான சத்யராஜ், பெரியார் படத்தில் நடித்த விதத்தைப் பார்த்து சினிமாக்கார்ரகள் அசந்து போயுள்ளனர். பல கமல்ஹாசன்களை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் பெரியார் வேடம் மூலமாக.

பெரியார் படத்தில் நடித்ததற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்க இப்போது பெரியார் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கத் தயாராகி வருகிறாராம் சத்யராஜ்.

பெரியார் படத்தில் நடித்தற்காக கோவையைச் சேர்ந்த பிம்பம் திரைப்பட இயக்கம் என்ற தனியார் அமைப்பு சத்யராஜுக்கு கோவையில் பாராட்டு விழாவை நடத்தியது.

இதில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசுகையில், பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது எனது லட்சியமாக இருந்தது. இப்போது பெரியார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதை லட்சியமாக கொண்டுள்ளேன்.

மாபெரும் சீர்திருத்தவாதியான பெரியாரின் கொள்கைகளையும், போதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நல்ல மீடியமாக சினிமா உள்ளது. சமூகத்தில் அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். அப்படியும் கூட இன்னும் பல பெரியார்கள் நமது சமூகத்திற்குத் தேவைப்படுகிறார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை திரும்பிய பெரியாரை போனில் பிடித்தோம். என்னைப் பொறுத்தவரை எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. சினிமாவில் சாதாரண துணை நடிகராக நுழைந்தேன். பிறகு மக்கள் என்னை நட்சத்திர வில்லனாக அங்கீகரித்தார்கள். பிறகு ஹீரோவாகவும் என்னைப் பொறுத்துக் கொண்டார்கள்.

எனது திரையுலக வாழ்க்கையில் பெரியார் மிகச் சிறந்த படம், மிகப் பெரிய படம். பெரியாரின் தீவிர விசுவாசி, தொண்டன் நான். எனவே இந்த ரோலில் நடிக்க எனக்கு எந்தவித தயக்கமோ, தடங்கேலா, சங்கடமோ இல்லை.

பெரியார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தற்போது ஆர்வமாக உள்ளேன். பெரியார் குறித்த அறிமுகம்தான் முதல் பாகம். அவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது. இரண்டாம் பாகம் மூலம் இளைஞர்களுக்கு பெரியார் போதித்த அறிவுரைகளை வெளிப்படுத்தலாம் என்றார் சத்யராஜ்.

இதற்கிடையே, எதிர்பார்த்ததை விட பெரியார் படம் மிகச் சிறப்பாக ஓடிக் கொகாண்டிருப்பதால், இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து திராவிடர் கழகம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.

இரண்டாம் பாகத்திற்கும் தமிழக அரசு நிதியுதவி செய்யுமா என்று தி.க. எதிர்பார்க்கிறது. முதல்வர் கருணாநிதி பச்சைக் கொடி காட்டினால் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

எத்தனை பாகம் எடுத்தாலும் அது நிச்சயம் சமூகத்திற்குத் தேவையான தத்துவ நளபாகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil