»   »  சூப்பர் ஸ்டார்.. ஆபத்து: சத்யராஜ்

சூப்பர் ஸ்டார்.. ஆபத்து: சத்யராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஆபத்தான ஒன்று என்று மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார்.

சத்யராஜ் வெளிப்படையாகவும், தில்லாகவும், லொள்ளாகவும் பேசுவதில் கில்லாடி. சமீபத்தில் நடந்த சீனா தானா 001 பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது மீண்டும் ஒரு முறை தனது துணிச்சலான பேச்சை வெளியிட்டார்.

இந்த முறை சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து மனதில் தோன்றியதைப் பேசி அத்தனை பேரையும் சலசலப்பில் ஆழ்த்தினார்.

பிரசன்னா, ஷீலா ஜோடியில், டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சீனாதானா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

மாதவன் நடித்த தம்பி படத்தைத் தயாரித்த மிட்வேலி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. மலையாளத்தில் வெளியான சிஐடி மூசா படம்தான் தமிழில் சீனாதானாவாக மாறியுள்ளது.

சத்யராஜ் கலந்து கொண்டு ஆடியோ சிடிக்களையும், கேசட்டுகளையும் வெளியிட திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், தமிழ் சினிமாவில் ரஜினி சார் போல சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். இளம் நடிகர்கள் மற்றும் வளரும் நடிகர்கள் எல்லாம் விஜய்யின் இடத்திற்கு வர வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லாதது. ஆனால் பாதுகாப்பான ஒரு இடத்தைப் பிடிப்பது சாத்தியமான ஒன்றுதான். திரைத் துறையில் தனக்கென பாதுகாப்பான இடத்தைப் பிடிக்க நடிகர்கள் முயற்சிக்கலாம். அது முடியக் கூடியது.

ரஜினி, விஜய்யே கூட பல பிரச்சினைகளை சந்தித்த பிறகுதான் இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பான இடத்தைப் பெறும் ஒரு நடிகருக்கு இந்த மாதிரியான சிக்கல்கள் எல்லாம் இல்லை. இதை நான் சும்மா சொல்லவில்லை. எனது சொந்த அனுபவத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

என்னைப் பொருத்தவரை பிரசன்னா ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் போல திரைத் துறையில் தனக்கென ஒரு பாணியில், பாதுகாப்பான இடத்தில் திகழ அவரை நான் வாழ்த்துகிறேன் என்றார் சத்யராஜ்.

இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். விழாவில் விக்ராந்த், ரியாஸ் கான், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கஸ்தூரிராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil