»   »  சத்யராஜைக் குழப்பிய கெமிஸ்ட்ரி!

சத்யராஜைக் குழப்பிய கெமிஸ்ட்ரி!

Subscribe to Oneindia Tamil

எனக்கும், ரஜினிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்கிறார்கள். முதலில் எனக்குப் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நல்ல ஜோடியைத்தான் அப்படிக் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.

தமிழ் சினிமாவில் உள்ள படு ஜாலியான கலைஞர்களில் சத்யராஜும் ஒருவர். எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாத படு இயல்பான நபர். படு ஜாலியாக பேசும் சத்யராஜ், சென்னையில் நடந்த கண்ணாமூச்சி ஏனடா பட ஆடியோ வெளியீட்டிலும் படு கலக்கலாக பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.

ராதிகா சரத்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் கண்ணாமூச்சி ஏனடா. இப்படத்தில் சத்யராஜ், ராதிகா ஒரு ஜோடியாகவும், பிருத்விராஜ், சந்தியா இன்னொரு ஜோடியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீபிரியாவும் படத்தில் உள்ளார். வி.பிரியா படத்தை இயக்கியுள்ளார்.

கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா இயக்கியுள்ள படம் இது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ கேசட் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில், பாலிவுட் ஸ்டார் விவேக் ஓபராய் கலந்து கொண்டு ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டார். முதல் கேசட்டை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், இப்படிப்பட்ட அருமையான படத்தில் நானும் பங்கு வகித்துள்ளேன் என்பது சந்தோஷமான விஷயம். படம் சிறப்பாக வந்துள்ளது.

நான் நடிக்க வந்து 30 வருடங்கள் ஆகி விட்டது. நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட வருத்தப்படாமல், கவலை இல்லாமல் ஜாலியாக நடித்து வருகிறேன்.

இங்கே பேசிய பலரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதைப் பார்த்தபோது, அடடா, நாமும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இப்போது பன்னாட்டு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் படம் தயாரிக்க வந்து விட்டன. எனவே ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். நானும் சீக்கிரமே ஆங்கிலம் கற்றுக் ெகாண்டு விடுகிறேன்.

சினிமாவில் ரொம்ப காலமாகவே கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன என்று எனக்குப் புரியவே இல்லை. இப்போது வரை கூட தெரியாது.

சமீபத்தில் ஷங்கர் என்னை சந்தித்து சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது அவரும் கூட உங்களுக்கும், ரஜினிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்றார். எனக்கு அது என்னவென்று புரியவில்லை. இருந்தாலும் பொத்தாம் பொதுவாக தலையை அசைத்து வைத்தேன்.

அதேபோல இயக்குநர் பிரியாவும் என்னிடம் கண்ணாமூச்சி ஏனடா படத்தின் கதையை விளக்கியபோது பிருத்விராஜுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்றார். சரி இதற்கு மேலும் தெரியாமல் இருந்தால் சரிப்படாது என்று நண்பர் மனோபாலாவிடம் கெமிஸ்ட்ரி என்றால் என்ன என்று விளக்கம் கேட்டேன்.

அதற்கு அவர், எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, சிவாஜி, பத்மினி, இதுதான் கெமிஸ்ட்ரி என்றார். எனக்கு ஷாக் ஆகி விட்டது. அந்த ஜோடிகள் பரவாயில்லை. எனக்கும், பிருத்விராஜுக்கும் கெமிஸ்ட்ரி, எனக்கும், ரஜினிக்கும் கெமிஸ்ட்ரி ஓ.கே. என்றால் அது எப்படி என்று குழப்பமாகி விட்டது.

ஆனால் இணைந்து நடிப்பதில் பொருத்தமானவர்கள் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பெரியார் படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று ஸ்ரீபிரியா கூறினார். எனக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. அது பெரியார் படத்தின் 100வது நாள் விழாவின்போது பெரியார் அணிந்திருந்த மோதிரம் எனக்குப் பரிசாக கிடைத்தது. அதைத்தான் விருது என்கிறேன்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி என்கிறார்கள். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் டாம் குரூஸ். ஆனால் என்னைப் பொருத்தவரை நான் தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர். பெரியார் மோதிரம் விலை மதிப்பற்றது, அதை நான் வாங்கிய காரணத்தால் நான்தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான் என்றார் சத்யராஜ்.

நிகழ்ச்சியில் ராதிகா வரவேற்பு நிகழ்த்தினார். சரத்குமார், ராம. நாராயணன், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil