»   »  ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில்... சத்யராஜ்!

ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில்... சத்யராஜ்!

Subscribe to Oneindia Tamil
Satyaraj with wife
பெரியார் வேடத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்பும் சத்யராஜ், அடுத்து மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிறைவேறாத ஆசை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. ஆனால் அந்த பாக்கியம் சத்யராஜுக்குத்தான் கிடைத்தது. பெரியார் படம் மூலம் அகில இந்திய அளவிலும் பிரபலமாகி விட்டார் சத்யராஜ்.

சமீபத்தில் வந்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் உலகின் மனங்களையும் நெகிழ வைத்து விட்டார் சத்யராஜ்.

அடுத்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் சத்யராஜ். தற்போது ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாக தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் சத்யராஜ்.

சமீபத்தில் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சத்யராஜ் நடித்த பெரியார் மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய இரு படங்களும் திரையிடப்பட்டு பெருவாரியான வரவேற்பையும் பெற்றன.

தற்போது தங்கம் படத்தில் வழக்கமான ஸ்டைலில் நடித்து வரும் சத்யராஜ், ஆண்டன் வேடத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக கூறுகிறார். அவர் கூறுகையில், பெரியார் வேடம் எனது நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேறி விட்டது.

அடுத்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளேன். தற்போது நடித்து வரும் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றின் ரீமேக்கில் ஆடியுள்ளேன். அடுத்து எம்.ஜி.ஆராக நடிக்க வேண்டியதுதான் பாக்கி.

அதேபோல என்னை சமீபத்தில் சந்தித்த ஒரு இயக்குநர், ஆண்டன் பாலசிங்கம் கேரக்டரில் நீங்கள் நடித்தால் மிகச் சிறப்பாக, பொருத்தமாக இருக்கும் என்றார். எனக்கும் ஒரு ஆசை வந்து மேக்கப் போட்டு டெஸ்ட் பார்த்தேன். அந்த இயக்குநர் சொன்னது சரிதான் என்று தோன்றியது.

இதனால் இப்போது ஆண்டன் வேடத்திலும் நடிக்கும் ஆவல் வந்து விட்டது. இந்ச ஆசை நிறைவேறும் என்றும் நம்பிக்கையோடு உள்ளேன்.

அப்புறம், தங்கர் பச்சான் ஒரு புதிய படம் எடுக்கவுள்ளார். வட இந்தியர் ஒருவரும், தென்னிந்தியர் ஒருவரும் சந்தித்து நண்பர்களாகும் கதை அது. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், நிகழ்வுகள்தான் கதை.

இந்தப் படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அமிதாப்புடன் இணைந்து நடிக்கப் போகும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன் என்றார் சத்யராஜ்.

சத்யராஜ், வர வர சர்வதேச நாயகனாகி வருகிறார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil