»   »  மனோஜ்குமாரிடம் ஷாருக் மன்னிப்பு

மனோஜ்குமாரிடம் ஷாருக் மன்னிப்பு

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஓம் சாந்தி ஓம் படத்தில் தனது கேரக்டரை ஷாருக்கான் சித்தரித்துள்ள விதம் குறித்து பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் அதிருப்தியும், கோபமும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் ஷாருக்கான், படத்தின் இயக்குநர் பாரா கான் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஷாருக்கான், தீபிகா படுகோண் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வெற்றிப் படமாகியுள்ளது ஓம் சாந்தி ஓம். இந்தியா தவிர வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு வேகமாக பரவியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக பழம் பெரும் நடிகர் மனோஜ்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். நகைச்சுவை என்ற பெயரில் தன்னை இழிவுபடுத்தி விட்டனர் என்றும் அவர் குமுறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது என்னை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், தேசபக்தி கொண்ட ஒவ்வொரு இந்திய ஆத்மாவையும் காயப்படுத்தியுள்ளது.

எனது படங்களில் தேச பக்தியையும், தியாகத்தையும் நான் வலியுறுத்தி நடித்தேன். இதனால்தான் எனது படங்களில் எனது கேரக்டர்களுக்கு பாரத் என்று பெயர் வைத்தேன். மக்களும் என்னை பாரத்தாகவே அங்கீகரித்துள்ளனர். எனவே, தேச விரோதிகள்தான் எனது இந்த தேச பக்தியை விமர்சிக்க முடியும், இப்படி அவமானப்படுத்த முடியும் என்று குமுறியுள்ளார் மனோஜ்குமார்.

ஷாருக்கான் தயாரிக்க, பிரபல டான்ஸ் மாஸ்டர் பாரா கான் ஓம் சாந்தி ஓம் படத்தை இயககியுள்ளார். இப்படத்தின் முதல் பாதியில், 70ம் ஆண்டுகளின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜூனியர் நடிகராக ஷாருக்கான் வருகிறார். சாந்திப்ரியா (தீபிகா) நடித்துள்ள ட்ரீமி கேர்ள் என்ற படத்தைப் பார்க்க மனோஜ்குமார் போல வேடமிட்டுக் கொண்டு தியேட்டருக்கு வருகிறார்.

அப்போது நிஜமான மனோஜ்குமார் தியேட்டருக்கு வருகிறார். ஆனால் அவரை டுபாக்கூர் என நினைக்கும் தியேட்டர் செக்யூரிட்டிகள் அடித்து நையப்புடைத்து விடுகின்றனர்.

இதேபோல இன்னொரு காட்சியிலும் மனோஜ்குமாரை இமிட்டேட் செய்து காமெடி செய்யப்பட்டுள்ளதாம்.

மனோஜ்குமார் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் பாராகானும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இருவரும் பல்வேறு இந்தி மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளனர்.

ஷாருக் கூறுகையில், மனோஜ்குமாரிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அவரது பேட்டியைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன். அவர் என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரை நேரில் சந்தித்து எனது படத்தை அவருக்குப் போட்டுக் காட்டுவேன் என்றார் ஷாருக்.

Read more about: manojkumar, shahrukh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil