»   »  பாலிவுட் ராஜாவின் கதை!

பாலிவுட் ராஜாவின் கதை!

Subscribe to Oneindia Tamil

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குநர் விது வினோத் சோப்ராவின் மனைவியும், திரைப்பட விமர்சகருமான அனுபமா சோப்ரா எழுதி நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார்.

கிங் ஆப் பாலிவுட் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த நூலில் ஷாருக் கானின் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பவங்கள், வெள்ளித் திரையில் சாதிக்க அவர் பட்ட சிரமங்கள் உள்ளிட்டவை அழகாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஷாருக் கான், டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தபோது பலரும் அவர் பெரிய ஸ்டார் ஆக முடியாது என்று கூறினர். ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி அவர் பாலிவுட்டின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக மாறினார். இன்றளவும் அவரது இடத்தைத் தாண்டி யாராலும் வர முடியவில்லை.

ஷாருக் கான் சினிமாவில் சாதிக்க போராடிய விதம், அவரது அணுகுமுறைகள் குறித்த அனுபமாக அழகாக எழுதியுள்ளார். பாலிவுட் சினிமாவின் மறுபக்கத்தையும் தனது புத்தகத்தில் விரிவாக விவரித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் புக்ஸ் (இப்போது அதன் பெயர் கிராண்ட் சென்டிரல் பப்ளிஷர்ஸ்) நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நூலை விநியோகிக்கும் உரிமைலை ஓம் புக் பப்ளிஷர்ஸ் மற்றும் வெஸ்ட்லேண்ட் புக்ஸ் நிறுவனம் ஆகியவை பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள லேண்ட் மார்க் புத்தக விற்பனை மையத்தில் ஷாருக்கான் வாழ்க்கை வரலாற்று நூல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஆங்கிலம் தவிர இந்தி, மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்த நூல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலையாக ரூ. 999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விற்பனை விலையாக ரூ. 639 என நிர்ணயித்துள்ளனர்.

மீரா நாயர், குரீந்தர் சத்தா, ஆஸ்கர் விருது பெற்ற எம்மா தாம்சன் ஆகியோர் இந்த நூலில் அணிந்துரை கொடுத்துள்ளனர். அனுபமாவின் எழுத்தை பாராட்டியுள்ளனர்.

ஷாருக்கான் கொடுத்துள்ள பாராட்டுரையில், அனுபமா சோப்ராவின் எழுத்துக்களை நான் மிகவும் ஆர்வத்துடன் படிப்பது வழக்கம். எந்தவித பாரபட்சமும் இன்றி எழுதக் கூடியவர் அனுபமா. சிந்தனையைத் தூண்டும் வகையில் அவரது எழுத்துக்கள் இருக்கும்.

அந்த வகையில் இந்த நூலை படிக்கும் யாருமே பாலிவுட் குறித்த சிந்தனையில் மூழ்குவது நிச்சயம். பாலிவுட்டைப் புரிந்து கொள்ளும் நூலாகவும் இது இருக்கும் என்று கூறியுள்ளார்.

அனுபமா சோப்ரா, இந்தித் திரையுலகம் குறித்து 1993ம் ஆண்டு முதலே எழுதி வருகிறார். இந்தியா டுடே, உமன்ஸ் எரா மற்றும் முன்னணி ஆங்கில இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தித் திரையுலகம் குறித்து பல வெளிநாட்டு இதழ்களிலும் கூட அனுபமா நிறைய எழுதியுள்ளார். என்.டி.டிவியில், தற்போது வாராந்திர திரைப்பட விமர்சன நிகழ்ச்சியையும் வழங்கி வருகிறார் அனுபமா.

கடைசியாக அனுபமா எழுதிய நூல் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. பிரிட்டிஷ் திரைப்பட கழகம் வெளியிட்ட இந்த நூல் 2002ம் ஆண்டு வந்தது.

அனுபமாவின் முதல் நூல், ஷோலே: தி மேக்கிங் ஆப் ஏ கிளாசிக். இந்த நூலுக்கு சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது கிடைத்தது.

அனுபமாவின் கணவரான விது வினோத் சோப்ரா பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர். இவரது சகோதரி தனுஜா சந்திராவும் பிரபல இயக்குநர்களில் ஒவர். இவரது தாயார் காம்னா சந்திரா, திரைக்கதை ஆசிரியர். சகோதரர் விக்ரம் சந்திரா இந்தி எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியரும் கூட.

தனது எழுத்துக்காக பல விருதுகளையும் பெற்ற அனுபமாவின் கிங் ஆப் பாலிவுட் நிச்சயம் ஷாருக்கின் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமாப் பிரியர்களையும் கூட கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil