»   »  சிவாஜி பஞ்ச் - சிம்பு பதிலடி!

சிவாஜி பஞ்ச் - சிம்பு பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் விவேக் பேசியுள்ள பஞ்ச் வசனம் என்னை மட்டும் குறி வைத்துப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. தனுஷும் கூடத்தான் விரல் வித்தை காட்டுகிறார் என்று சிம்பு கூறியுள்ளார்.

சிவாஜி படத்தில் ஒரு காட்சி வருகிறது. ரஜினி ஒரு வசனம் பேசப் போவார். அப்போது விவேக் குறுக்கிட்டு, என்ன பஞ்ச் டயலாக் பேசப் போறியா.. சிவாஜி என்பார்.

அதற்கு ரஜினி மண்டையை ஆட்ட, இப்பெல்லாம் சின்னப் பசங்க எல்லாம் விரலை மடக்கி வசனம் பேசுறாங்க.. என்பார் விவேக்.

இதையடுத்து பஞ்ச் டயலாக்கை விவேக்கே பேசுவார் (சித்தூர தாண்டுனா காட்பாடி...சிவாஜிய தொட்டா டெட் பாடி, சிக்ஸுக்கு அப்புறம் செவன்டா... சிவாஜிக்கப்புறம் எவன்டா என்பார்).

இந்தக் காட்சியே சிம்புவை மனதில் வைத்துத்தான் சேர்க்கப்பட்டதாக கருத்து எழுந்துள்ளது. காரணம், சிம்புவின் ஆரம்ப காலப் படங்களில் விரல்களை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பயமுறுத்தினார்.

குறிப்பாக காதல் அழிவதில்லை படத்தில் அவரது விரல்கள் செய்த அலும்புகள் இன்றும் கூட ரசிகர்களுக்கு மறக்க முடியாத பயானுபவமாக உள்ளது.

இந் நிலையில் விவேக் பேசிய வசனம் குறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். தேனியில் காளை படத்தின் ஷூட்டிங் உள்ள சிம்பு, படத்தின் இயக்குநர் தருண்கோபி உள்ளிட்டோருடன் அங்குள்ள சுந்தரம் தியேட்டரில் சிவாஜியைப் பார்த்தார்.

படம் பார்க்கப் போனபோது ஜாலியாக சென்ற சிம்பு படம் முடிந்து வெளியே வந்தபோது வாட்டமாக இருந்தார். படம் குறித்து எந்தக் கருத்தும் கூற மறுத்து விட்டார். விவேக் வசனம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் விவேக் வசனம் குறித்து சிம்பு கூறுகையில், விவேக், சின்னப் பசங்க எல்லாம் விரலை மடக்கி பஞ்ச் டயலாக் பேசுறாங்க என்று சொல்லியுள்ளார். அது என்னைத் தாக்கிப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவில் நான் மட்டும் இளம் நடிகர் இல்லை. தனுஷும் கூட இளம் நடிகர்தான். தனுஷ் நடித்த சுள்ளான் படத்தில் கூட, விரலைக் காட்டி, சுள்ளான் சூடானால் சுளுக்கு எடுத்துடுவான் என்று வசனம் பேசினார்.

என்னைப் போன்று இன்னும் பல இளம் நடிகர்களும் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். அதனால் என்னைத்தான் விவேக் சொல்லியுள்ளார் என்று கூற முடியாது.

யாரை மனதில் வைத்து அவர் டயலாக் பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். யாரைத் தாக்கி அவர் பேசினார் என்பதையும் அவரேதான் சொல்ல வேண்டும் என்றார் சிம்பு.

புது வம்புக்கு பிள்ளையார் சுழியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil