»   »  சிம்பு படப் பெயரால் வம்பு!

சிம்பு படப் பெயரால் வம்பு!

Subscribe to Oneindia Tamil

சிம்பு நடிக்கும் கெட்டவன் படத்தின் பெயர் சரியில்லை. எனவே டைட்டிலை மாற்ற வேண்டும் என அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. ஆனால் படப் பெயரை மாற்ற முடியாது என்று சிம்பு கூறி விட்டாராம்.

தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக ஒரு டிரெண்டு உருவாகி வருகிறது. முன்பெல்லாம், ஏய், ஊய், உஷ், புஷ் என்ற ரேஞ்சுக்கு குண்டக்க மண்டக்க பெயர்களை வைத்து அசத்தினார்கள்.

இதெல்லாம் நல்லா இல்லை என்று டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் சொல்லிப் பார்த்தனர், போராடியும் பார்த்தனர். ஆனாலும் சிலர்தான் அவர்கள் பேச்சுக்கு மதிப்பளித்து படப் பெயரை டீசன்ட்டாக வைத்தனர். பெரும்பாலானவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து தமிழில் படப் பெயர்கள் வைத்தால் கேளிக்கை வரியில் சலுகை என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து அத்தனை பேரும் தடாலென தமிழுக்கு மாறினர். இப்போதெல்லாம் சுத்தத் தமிழில்தான் பெயர்கள் வருகின்றன.

ஆனால் சமீபத்தில் புதிதாக ஒரு டிரெண்டு கிளம்பியுள்ளது. இது தயாரிப்பாளர் சங்கத்தைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. சுந்தர்.சி. நடிக்க பொறுக்கி என்று ஒரு படமும், சிம்பு நடிக்க கெட்டவன் என்ற படமும், தனுஷ் நடிக்க பொல்லாதவன் என்ற படமும் உருவாகிறது.

பொறுக்கி, கெட்டவன் போன்ற பெயர்கள், புதிய மாற்றத்துக்கு வழி வகுத்து விடும். இதேபோன்ற பெயர்களில் எதிர்காலத்தில் பல படங்கள் கிளம்பி விடும் என்று பயந்த தயாரிப்பாளர் சங்கம், சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களைக் கூப்பிட்டு படத்தின் பெயரை மாற்றும்படி கோரியது.

தனுஷ் படத்தின் பெயரை மாற்றுமாறு கூறியதற்கு, பொல்லாதவன் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதை வைத்துத்தான் இந்தப் பெயரை வைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளனர். அதை சங்கம் ஏற்றுக் கொண்டு விட்டது.

அதேபோல பொறுக்கி படத் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் தரப்பில், பொறுக்கி என்றால் சமூகத்தில் நடக்கும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் (அண்ணே, புல்லரிக்குதண்ணே) என்று அர்த்தம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று படத்தின் பெயரை மாற்றுவது குறித்து ஷக்தி சிதம்பரம் யோசித்து வருகிறாராம். இந்த இரு படங்களின் டைட்டல் பிரச்சினையும் இப்படி சுமூக நிலையில் உள்ளது.

ஆனால் கெட்டவன் படத் தலைப்புதான் மாறுமா? மாறாதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம், தனது படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டாராம் சிம்பு.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், கெட்டவன் என்றால் ஒரு பெண்ணால் கெட்டுப் போனவன் என்று அர்த்தம். ஒரு இளைஞனின் வாழ்ககை பெண்ணால் கெட்டுப் போனதை விளக்கமாக இந்த படத்தில் சொல்லியுள்ளேன். அதனால்தான் இப்பெயரை சூட்டியுள்ளேன்.

இதுகுறித்து சங்கத்திடம் விளக்கியுள்ளேன். யாரையும் திட்டும் வகையில் இப்பெயரை வைக்கவில்லை. நான் எதற்கு மற்றவர்களைத் திட்ட வேண்டும் என்று கோபத்துடன் கேட்டார் சிம்பு.

பெண்ணால் கெட்டவன் கதை என்றால்... எந்தப் பெண்ணால், யார் கெட்ட கதை இது சிம்பு?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil