சினிமாவை விட்டு போனாலும்..முதலமைச்சர், துணை முதலமைச்சரை வைத்துக்கொண்டு பிளான் சொன்ன சிவகார்த்திகேயன்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மதராஸி திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இப்படம் எவ்வளவோ பரவாயில்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அடுத்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கரியரையே மாற்றி வைத்திருக்கிறது. பலரும் அவரது கமர்ஷியல் மற்றும் மாஸ் மொமன்ட்ஸ்களுக்காக சீன்களை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி சம்பளத்திலும் பன்மடங்கை அவர் அதிகரித்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மதராஸி திரைப்படமும் அண்மையில் வெளியாகி முதலுக்கு மோசமில்லை என்ற ரிசல்ட்டை பெற்றுக்கொடுத்தது.
அடுத்த படங்கள்: அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி எஸ்கே உள்ளே வந்தார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இது அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இயக்குநர் தொட்டிருக்கும் கதை கரு அப்படி.

என்ன கதை கரு?: அதாவது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக வைத்துதான் சுதா இப்படத்தை எடுத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் க்ளிம்ப்ஸும் வெளியாகி எஸ்கே இதில் வேறு மாதிரி தோன்றவிருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. முதன்முறையாக இந்த ஜானர் படத்தில் சிவா நடிப்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்திருக்கிறது.
பொது மேடைகளில்: இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர்; மறுபக்கம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் நிறுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன்பு மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணர்வுப்பூர்வமாகவும் எதார்த்தமாகவும் பேசினார். இப்போது தமிழ்நாடு அரசு நடத்திய கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதில் அவர் மட்டுமின்றி தியாகராஜ குமாரராஜா, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சைமுத்து உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்.
எஸ்கேவின் பேச்சு: விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் முன்னிலையில் பேசியபோது, "எனது தந்தை கஷ்டப்பட்டுத்தான் படித்தார். அவரால் பிடித்ததை படிக்க முடியவில்லை. கிடைத்ததைத்தான் படித்தார். நான் B.E, MBA ஆகிய இரண்டு டிகிரிகளை வைத்திருக்கிறேன். எனது அக்கா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மூன்று டிகிரிகளை வைத்திருக்கிறார்.
பிழைத்துக்கொள்வேன்: சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் நுழைவது அசாத்தியமான ஒன்று. நான் படித்த டிகிரிகளுக்கும் இப்போது செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேசமயம் சினிமா துறை என்னை அனுப்பிவிட்டாலும் என்னிடம் இருக்கும் இரண்டு டிகிரிகளை வைத்து பிழைத்துக்கொள்வேன். எனவே படிப்பு ரொம்ப முக்கியம்" என்றார்.


Click it and Unblock the Notifications











