»   »  சூர்யா புகார் - ஆஸ்கர் வாபஸ்

சூர்யா புகார் - ஆஸ்கர் வாபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்காமல் வேல் படத்திற்குத் தாவியதால் சூர்யா மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்த, ஆஸ்கர் ரவிசந்சந்திரன் தனது புகாரை திரும்பப் பெற்றுள்ளார்.

பிரமாண்டப் படங்களைக் கொடுக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தற்போது கமல்ஹாசனை வைத்து தசாவதாரம் படத்தைத் தயாரித்து வருகிறார். இதேபோல சூர்யா நடிக்க, கெளதம் மேனன் இயக்கத்தில், வாரணம் ஆயிரம் படத்தையும் தயாரித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில் திடீரென சூர்யா, ஹரியின் வேல் படத்திற்கு 75 நாள் கால்ஷீட்டைக் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்கர், தயாரிப்பாளர் கவுன்சிலில் சூர்யா மீது புகார் கொடுத்தார்.

தனது படத்தில் நடிக்காமல், வேல் படத்திற்கு சூர்யா போகக் கூடாது என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார் ரவிச்சந்திரன். இதையடுத்து திங்கள்கிழமை (நேற்று) மாலை இரு தரப்பையும் கூப்பிட்டு விசாரித்தது தயாரிப்பாளர் கவுன்சில்.

இதையடுத்து சூர்யா தன் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு அளித்தார். தான் படத்திலிருந்து விலகவில்லை எனவும், நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில், சூர்யாவும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் பிரச்சினை குறித்து நேரில் சந்தித்து ஆலோசித்தனர். பின்னர் பிரச்சினையை தங்களுக்குள் முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். மேலும், சூர்யா மீதான புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இயக்குநர் கெளதமும், ஆஸ்கரை வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று மாலை தயாரிப்பாளர் கவுன்சிலில் ஆஸ்கர் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் சூர்யா மீதான புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஆஸ்கரை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனக்கும், சூர்யாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதுவே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகி விட்டது.

இப்போது தனது நிலையை சூர்யா விளக்கி விட்டார். எனவே சூர்யா தரும் தேதியில் படப்பிடிப்பைத் தொடர தீர்மானித்துள்ளோம். படத்தை முடித்துக் கொடுக்க சூர்யா மிகவும் ஆர்வமாக உள்ளார் என்றார்.

அப்பாடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil