»   »  விஷால், சிம்புவிடம் மன்னிப்புக் கேட்ட தருண் கோபி!

விஷால், சிம்புவிடம் மன்னிப்புக் கேட்ட தருண் கோபி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Tharun Gopi
திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய தருண்கோபி, அந்த இரு படங்களின் நாயகர்களான விஷால் மற்றும் சிம்பு குறித்து முன்பு கடுமையாகப் பேசிவிட்டார்.

ஆனால் இப்போது தானே முழு நேர நடிகராக மாறிய பிறகுதான் நடிகர்களின் கஷ்டம் என்னவென்று புரிகிறதாம் அவருக்கு. எனவே முன்பு தான் பேசியதற்காக இப்போது சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் தருண் கோபி.

சமீபத்தில் சென்னை தியாகராயா க்ளப்பில் நடந்த பேச்சியக்கா மருமகன் என்ற படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறியது.

'பேச்சியக்கா மருமகன்" படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார் தருண் கோபி மாமியார் - மருமகன் பாசத்தைச் சொல்லும் கதையாம் இது.

இதில் மருமகனாக தருண் கோபி நடிக்க, மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். இப்படத்திற்கு தருண் கோபி கதை, வசனம் எழுத, அவருடைய நண்பரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான பாலகுமாரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

சபேஷ்-முரளி இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். இதுவரை படங்களை விநியோகம் செய்துவந்த மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் இறங்கியிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தருண் கோபி, 'மாயாண்டி குடும்பத்தார்" படத்திற்குப் பிறகு எனக்கு வந்த கதைகள் அனைத்துமே கையில குச்சிய வச்சிக்கிட்டு ஆடு மேய்ப்பது போலதான் வந்தன. எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் இவ்வளவு இடைவெளி.

இந்த படத்திற்காக ஒரு நடிகனாக பெரும் உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போதுதான் புரிந்தது நடிகர்களின் நிலை. இந்த நேரத்தில் நான் என் சக நடிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முன்பு சில நிகழ்ச்சிகளில் பேசும் போது விஷால், சிம்பு போன்ற நடிகர்கள் மீது கோபப்பட்டு பேசியிருக்கிறேன். அதற்காக வருத்தமும், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்," என்றார்.

ஆக, மருமகனை 'திருத்திவிட்டார்' 'மாமியார்'!

English summary
Director turned actor Tharun Gopi apologised Vishal and Simbu for his unwanted comments on them.
Please Wait while comments are loading...