»   »  குஷ்புக்கு பார்த்திபன் உதவிக்கரம்

குஷ்புக்கு பார்த்திபன் உதவிக்கரம்

Subscribe to Oneindia Tamil
Parthiban with Kushboo
குஷ்பு கடவுள் சிலைகளிடம் மரியாதையின்றி நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினால் அவரை மட்டுமல்ல, அன்று மேடையில் இருந்த எங்கள் அனைவரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தவிர நேற்று ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி நகர தலைவர் கண்ணன் சிவா என்பவரும் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் குஷ்புவுக்கு பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வல்லமை தாராயோ பட விழாவில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், சுந்தரராமன், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சாம் பிரியா, டாக்டர் கமலா செல்வராஜ் உட்பட பலர் செருப்பு அணிந்து தான் இருந்தனர்.

ஆனால் பத்திரிக்கைககளில் குஷ்பு பற்றி வந்த செய்தி படித்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு போட்டோவால் இவ்வளவு சர்ச்சையா. கடைசி நேரத்தில் தான் குஷ்புவை நான் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அவரும் முழு விருப்பத்துடன் விழாவிற்கு வர சம்மதித்தார்.

அன்று நடந்தது ஒரு படபூஜை விழா. அதில் கலந்து கொள்ள அழைக்கும் போது குஷ்புவை ஒரு நடிகை என்ற முறையிலேயே பார்த்தேன். அவர் முஸ்லிமா அல்லது கிறிஸ்தவரா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மேடையில் போடப்பட்டிருந்தது ஒரு செட்தான். உண்மையான கோவில் கிடையாது. விழா மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதற்கு முன்பே பட பூஜை முடிந்து விட்டது.

பூஜை நடக்கும் வரை மேடையில் இருந்த எவரும் செருப்பு அணியவில்லை. பூஜை முடிந்த பினனர் தான் எல்லோரும் செருப்பு அணிந்து கொண்டார்கள். என்னை பொறுத்தவரை இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக நினைக்கவில்லை.

மொத்த விழாவும் ஒரு நல்ல நோக்கத்துடன் தான் நடத்தப்பட்டது. அது யாருடைய மத உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.

எனினும் அன்று குஷ்பு மரியாதையின்றி நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினால் அந்த மேடையில் அவரை மட்டுமல்ல. மேடையில் இருந்த அனைவரையும் அந்த குற்றச்சாட்டு சேரும் என்றார் பார்த்திபன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil