»   »  இந்திரலோகத்தில் டமால்!

இந்திரலோகத்தில் டமால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் 23ம் புலிகேசிக்குப் பிறகு வைகைப் புயல் வடிவேலு நாயகனாக நடிக்க உருவாவதாக இருந்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படம் கைவிடப்பட்டு விட்டது.

சிரிக்க வைத்து வயிறுகளைப் புண்ணாக்கி வந்த வடிவேலுைவ ஹீரோவாகப் போட்டு எடுக்கப்பட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றிகரமாக ஓடி சக்கையாக வசூலைப் பின்னி எடுத்தது வரலாறு.

இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் அவரை ஹீரோவாகப் போட பலரும் முயன்றனர். ஆனால் வடிவேலு சுதாரிப்பாக மறுத்து விட்டார். இருந்தாலும், அவரிடம் தொடர்ந்து கதை சொல்லி தனது இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் வாங்கினார் புதுமுக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி. படத்தை ராஜகோபால் என்பவர் தயாரிப்பதாக இருந்தது.

அந்தக் காலத்து நடிகரான ரஞ்சன் நடிப்பில் வெளியான பூலோக ரம்பை படத்தின் ரீமேக்தான் இந்த அழகப்பன். படத்தில் வடிவேலுவுக்கு 3 ஜோடிகள் என்று கூறப்பட்டது. அதில் ஒருவராக ஷில்பா ஷெட்டியின் பெயர் அடிபட்டது. அவர் சம்மதித்து விட்டதாகக் கூட கூறினார்கள். அதேபோல சிம்ரன், மல்லிகா ஷெராவத், நயனதாரா, ஆகியோரின் பெயர்களும் கூட அடிபட்டன

இந்தப் படத்துக்காக வடிவேலுவுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் தரப் போவதாகவும் கூட பேச்சு நிலவியது. அட்வான்ஸாக ரூ. 25 லட்சத்தை தயாரிப்பாளர் தந்து விட்டாராம்.

ஆனால் இப்போது திடீரென படத்தைக் கைவிட்டு விட்டாராம் தயாரிப்பாளர். என்ன காரணம் என்று குடாய்ந்தபோது, பைனான்சியரால் வந்த குழப்பம் எனத் தெரிய வந்தது.

படத்துக்கு பைனான்ஸ் செய்வதாக இருந்தவர் ஒரு நாள் புயலுக்குப் போன் செய்துள்ளார். அண்ணே, நீங்க கண்டிப்பா நடிக்கிறீங்களா.ஏன்னா, உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் கடன் கொடுக்கலாம்னு பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் பைனான்சியர்.

ஆஹா, இவன் கொடுக்கப் போகிற கடனுக்கு நம்ம தலையை அடகு வைக்கப் பார்க்கிறானே என்று சுதாரித்துக் கொண்ட வடிவேலு, அய்யா, இயக்குநர் மேலயும், தயாரிப்பாளர் மேலயும் நம்பிக்கை இருந்தா கடன் கொடுங்க. நானெல்லாம் ஒரு சாதாரண நடிகன். அம்புட்டுதான். என்னய வச்சுத்தான் பணம் கொடுக்கிறதா இருந்தா தயவு செய்து அந்த எண்ணத்தையே மறந்துடுங்க என்றாராம்.

இந்த போன் குலாவல் முடிந்த சில நாட்களில் பணம் தர முடியாது என்று பைனான்சியர் மறுத்து விட்டாராம். வேறு வழியில்லாமல் படத்தைக் கைவிட்டு விட்டாராம் தயாரிப்பாளர்.

இந்தப் படத்துக்காக 70 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தாராம் வடிவேலு. அதில் 20 நாட்களை இப்படிப் பேசிப் பேசியே காலி செய்து விட்டனராம். வடிவேலுவிடம் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் தயாரிப்பாளர்.

நல்லவேளை, ஷில்பா ஷெட்டி அன் கோ தப்பிச்சாகப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil