»   »  'புலம்பிட்டாய்ங்க பங்காளி'

'புலம்பிட்டாய்ங்க பங்காளி'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vadivelu with Teetha
என்னுடன் ஒரு பாட்டுக்கு ஷ்ரியா ஆடுகிறார் என்ற தகவலைக் கேள்விப்பட்டது முதல் பல ஹீரோக்கள் தூக்கம் வராமல் புலம்பியதாக கூறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு.

துக்கடா ரோலில் நடிக்க ஆரம்பித்து, தனது திறமை, அலப்பறை நடிப்பு, அட்டகாச சிரிப்பு, அசத்தல் ஆட்டம் என சகலகலா திறமைகளையும் கொட்டிக் கவிழ்த்து இன்று உச்சத்திற்கு உயர்ந்துள்ளார் வடிவேலு.

மதுரைக்குப் பக்கம் உள்ள ஐராவதநல்லூர் என்ற குற்றூரிலிருந்து கிளம்பி வந்த வடிவேலு இன்று பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளார். காமெடியனாக மட்டும் இல்லாமல், ஹீரோவாகவும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

முதல் ஹீரோ படமான இம்சை அரசன் ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாத நிலையில், இப்போது இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என சிலம்பக் கிளம்பி விட்டார் வடிவேலு.

மூன்று விதமான கெட்டப்களில் நடிக்கும் வடிவேலு, இந்தப் படத்தில் ஷ்ரியாவுடன் ஒரு துள்ளல் ஆட்டமும் போட்டு ஹீரோக்கள் பலரை துவள விட்டுள்ளார்.

வடிவேலுவுடன், ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்ற செய்தி பரவியதுமே பல முன்னணி ஹீரோக்களுக்கு பெரும் ஷாக் ஆகி விட்டதாம். இதை வடிவேலுவே பகிரங்கமாக தெரிவித்தார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பின்னர் தயாரிப்பாளர் செவன்த் சானல் மாணிக்கத்தின் அலுவலகத்தில் இணையதள செய்தியாளர்களை சந்தித்தார் வடிவேலு.

அப்போதுதான் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டார் வடிவேலு. யார் அந்த ஹீரோக்கள் என்று நாம் கேட்டபோது, ஏம்ப்பு, நம்ம வண்டி ஸ்மூத்தா ஓடுறது புடிக்கலியா, நியூஸ் போடறேன்னு காமெடி பண்ணிடாத பங்காளி என்று தனக்கே உரிய பாணியில் நழுவினார்.

பிறகு தொடர்ந்து அவர் கூறுகையில், நான் சொல்வது உண்மைதான். ஜோக் இல்லை. செய்தியைக் கேள்விப்பட்டதும் பல ஹீரோக்கள் தங்களுக்குள் போன் செய்து இதுகுறித்துப் பேசியுள்ளனர். நூற்றுக்கணக்கான போன் அழைப்புகள் பறந்துள்ளன.

என்னுடன், ஷ்ரியா ஆடுவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. சில முன்னணி ஹீரோக்களுக்கு தூக்கமே போய் விட்டதாம். என்னுடன் ஷ்ரியா ஆடுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் வடிவேலு.

சரிண்ணே, சிவாஜிக்குப் பிறகு ஷ்ரியா ரொம்ப காஸ்ட்லியாகி விட்டார். உங்களால் எப்படி அவரது கால்ஷீட்டைப் பெற முடிந்தது?

அது ஒரு பெரிய கதை பங்காளி. தயாரிப்பாளர் செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன், ஷ்ரியாவை அணுகி என்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடி நடிக்க வேண்டும் என்று கேட்டார். அதைக் கேட்டதும், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டார் ஷ்ரியா. பெரிய சம்பளம் தரப்பட்டது வேறு கதை. ஆனால் என்னுடன் ஆட ஷ்ரியா ஒத்துக் கொண்டது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம்.

உங்களுடன் ஆடியதால் ஷ்ரியாவுக்கு மிகப் பெரிய படம் ஒன்று போய் விட்டதே. தெரியுமா உங்களுக்கு?

ஆமாப்பு. ஆனால் நீங்க ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும். ஷ்ரியா என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. என்னுடன் ஒரு காமெடியான பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். அதுவும் கூட ரொமான்ஸாகக் கூட இல்லை. சும்மா நால்ரை நிமிஷந்தான் அந்தப் பாட்டு வரும்.

அந்தக் காலத்துல, சர்வர் சுந்தரம் படத்துல, நாகேஷ் சாருடன், கே.ஆர்.விஜயா நடித்ததை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது அவர் புன்னகை அரசி. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் நடித்துக் கொண்டிருந்தவர்.

அப்பேர்ப்பட்டவர், நாகேஷ் சாருடன், அவரை காதலிப்பது போல நடித்தது பெரிய விஷயம் இல்லையா. ஆனால் எம்.ஜி.ஆர். அதைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை. மாறாக தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து விஜயாம்மாவை ஆசிர்வதித்தார்.

உங்களுடன் ஆடியபோது ஷ்ரியா எப்படி உணர்ந்தார்?

அவர் ஒரு பக்கா நடிகை. என்னுடன் ஆடிப் பாடப் போகிறீர்களே, எப்படி நினைக்கிறீங்க என்று அவரிடம் நான் கேட்டபோது, வடிவேலு சார், நான் உங்களோட பரம ரசிகை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார். எவ்வளவு பெரிய மனசு அவருக்கு.

இந்தத் துறையில் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னுடன் நடிக்க துணிந்த அவருடைய மன பலத்தையும், உறுதியான முடிவையும் நான் பாராட்டுகிறேன் என்றார் வடிவேலு.

இதைப் படித்த பிறகு இன்னும் எந்தெந்த ஹீரோக்கள் எல்லாம் புலம்பப் போறாங்களோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil