»   »  நடிப்பீங்களா, மாட்டீங்களா?

நடிப்பீங்களா, மாட்டீங்களா?

Subscribe to Oneindia Tamil

அஜீத்துடன் இணைந்து நடிக்கத் தயார் என மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளார் விஜய்.

இதனால் கோலிவுட்டில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம். ஒரே நேரத்தில் பிரபலமாக இருக்கும் இருவரிடம், செய்தியாளர்கள் தனித் தனியாக சந்தித்து அவருடன் சேர்ந்து நடிப்பீங்களா என்று கேட்பார்கள். அதற்கு அந்த நாயகர்களும், நல்ல கதை கிடைத்தால் நடிக்கத் தயார் என்பார்கள்.

ஆனால் கடைசி வரை இருவரும் சேர்ந்து நடிக்கவே மாட்டார்கள். இந்தக் கூத்து ரொம்ப காலமாகவே தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.

யார் முன்னணி நடிகர் என்பதை பொதுமக்களை விட பத்திரிகைகள்தான் முதலில் நிர்ணயிக்கின்றன. இவர் ரஜினியின் வாரிசு, இவர் கமலின் வாரிசு என்று இவர்களாக இரு நடிகர்களை எடுத்துக் ெகாண்டு கதை கதையாக எழுதி வாரிசுகளை உருவாக்கி விடுவார்கள்.

ஆனால் உண்மையில் அவர்களை விட நல்ல நடிகர்கள் இருந்தாலும் கூட அவர்களை அடுத்த ரேங்கில்தான் வைத்துப் பார்ப்பார்கள், எழுதுவார்கள். உதாரணத்திற்கு ரஜினிக்கு இணையான (நடிப்பிலும், குணத்திலும், ஸ்டைலிலும்) நடிகர் இன்னும் தமிழுக்கு வரவில்லை. ஆனாலும் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று எழுத ஆரம்பித்து ரொம்ப நாட்களாகி விட்டது.

இப்போது விஜய்யை விட சூப்பர் நடிகர் இருந்தாலும், வந்தாலும் கூட விஜய்தான் ரஜினியின் வாரிசாக இருப்பார்.

பாகவதர், சின்னப்பா காலத்தில் அவர்கள்தான் சூப்பர் ஸ்டார் நடிகர்கள். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி வந்தனர். இருவரும் கடும் போட்டியாளர்களாக கருதப்பட்டனர்.

இருவருக்கும் ஒத்துப் போகாது, கடுமையான எதிரிள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதினர். ஆனால் நிஜத்தில் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு ரஜினி, கமல் என இருவரை எடுத்து வைத்துக் கொண்டு மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளினர். இருவரது ரசிகர்களும் 25 ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டதுதான் இதில் மிச்சம்.

இப்போது அந்த பாரம்பரியத்தை விஜய், அஜீத் மூலம் தொடர நிைனக்கிறது சினிமா பத்திரிக்கை உலகம். விஜய்தான் ரஜினியாம், அஜீத்தான் கமலாம். இருவருக்கும் ஒத்துப் போகாதம், இருவரும் கடும் எதிரிகளாம். இந்த அடிப்படையை வைத்துதான் எழுதுகிறார்கள்.

இதை நிரூபிப்பது போல இருவரது படங்களிலும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போன்ற வசனங்கள் வேறு இடம் பெற்றால் பத்திரிகைகளுக்கு நல்ல விருந்தாகிப் போனது.

ஆதி காலத்தில் தியாகராஜ பாகவதரும், சின்னப்பாவும் சேர்ந்து நடிப்பார்களா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி பக்கம் தாவினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து கூண்டுக்கிளி என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

பிறகு ரஜினி, கமல் இணைந்து நடித்தபோது, தனித் தனியாக நடிக்க மாட்டீர்களா என்று வித்தியாசமாக கேட்டுப் பார்த்தனர் நம்மவர்கள்.

அவர்கள் பிரிந்து தனித் தனியாக கலக்க ஆரம்பித்த இத்தனை காலத்திற்குப் பிறகு மீண்டும் சேர்வீங்களா என்ற பழைய கேள்வியை தூசு தட்டி எடுத்து தூள் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதே கேள்வி இப்போது இளம் நடிகர்களிடமும் கேட்கப்படுகிறது. விஜய்யைப் பார்த்தால் அஜீத்துடன் சேர்ந்து நடிப்பீங்களா என்று கேட்பது.

அஜீத்தைப் பார்த்தால் விஜய் கூட சேருவீங்களா என்று கேட்பது.

அதே கேள்வியுடன் சிம்புவைப் போய்ப் பார்த்து தனுஷ் கூட நடிப்பீங்களா என்று கலாய்ப்பது, பிறகு தனுஷிடம் போய், ஏன் சிம்பு கூட சேர மாட்டேங்கறீங்க என்று குடாய்வது என தொட்டில் பழக்கத்திலிருந்து இன்னும் மாறவில்லை நமது சினிமா பத்திரிக்கையாளர்கள்.

நம்ம ஊர் நடிகர்கள் என்ன பாகிஸ்தானிலா வசிக்கிறார்கள்?. இரண்டு பிரபல நடிகர்களை இவர்களாகவே தேர்வு செய்து வைத்துக் கொண்டு அவர்களுக்கிடையே கொம்பு சீவி விடுவதுதான் இந்தக் கேள்வியின் உண்மையான நோக்கமே. அப்பத்தானே சூடான, சுவையான செய்தி கிடைக்கும்.

இந்த வகையில்தான் சமீபத்தில் விஜயிடம், அஜீத்துடன் சேருவீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவரும் கதை கிடைத்தால் நடிப்பேன் என்று கூறினார்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் கேள்விகள் தொடரப் போகிறதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil