»   »  விஜய் படம் - தவிக்கும் இயக்குநர்

விஜய் படம் - தவிக்கும் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கவது என்பது இயக்குநர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் தலைவலியான விஷயம்தான். லேட்டஸ்டாக தவிப்புக்கு ஆளாகியிருப்பவர் விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கி வரும் பரதன்.

தரணியிடம் உதவியாளராக இருந்தவர் பரதன். இவர் தற்போது விஜய், நமீதா, ஷ்ரியா நடிக்க உருவாகும் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கி வருகிறார். அப்பச்சன் படத்தைத் தயாரிக்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாமே சுமூகமாகத்தான் இருந்ததாம். ஆனால் இப்போது பெரும் மண்டை இடியில் சிக்கித் தவிக்கிறாராம் பரதன்.ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டின்படி, படத்தின் நாயகனான விஜய், புத்திசாலியான, நகைச்சுவை உணர்வு மிக்க, மென்மையான ஒரு இளைஞன். இதை வைத்துத்தான் படத்தை ஆரம்பித்தனர்.

முதல் ஷெட்யூலும் முடிந்து விட்டது. அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விஜய்க்கு அதிருப்தியாகி விட்டதாம். இப்படி எடுத்தால் எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படத்தில் ஒரு விறுவிறுப்பையே காணோமே, ஆக்ஷன் இல்லாத விஜய் படமா என்று அலுத்துக் கொண்டாராம்.

இதையடுத்து படத்தின் கதையை மாற்றுமாறு பரதனிடம் கூறியுள்ளார். ஆனால் விஜய்யிடம் பொறுமையாக தனது கதையை விளக்கியுள்ளார் பரதன். இதுவரை இல்லாத விஜய்யை இப்படத்தில் காட்டவுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அதில் விஜய் திருப்தி அடையவில்லையாம். பரதனைக் கூப்பிட்டு, இப்படித்தான் புதிய கீதை என்ற படத்தை ஒருவர் இயக்கினார். வித்தியாசமான விஜய்யைக் காட்டுகிறேன் என்று சொல்லி படத்தை எடுத்தார். ஆனால் படத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை. இப்படத்திற்கும் அதே கதிதான் ஏற்படும். எனவே ரசிகர்களுக்கேற்றபடி காட்சிகளை மாற்றியே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டாராம்.

இயக்குநரிடம் சொன்னதோடு நில்லாமல் தயாரிப்பாளர் அப்பச்சனையும் கூப்பிட்டு கதையை மாற்றுங்கள் இல்லாவிட்டால் கஷ்டம் என்று கூறி விட்டாராம்.

வேறு வழி தெரியாத பரதனும் படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். பின்னர் அதற்கேற்ப சில காட்சிகளை மாற்றிப் படம் எடுத்துள்ளார். அப்படியும் திருப்தி வரவில்லையாம் விஜய்க்கு.

இப்போது பஞ்சாயத்து பரதனின் குருவான தரணியிடம் போயுள்ளதாம். தரணியைக் கூப்பிட்ட விஜய், பரதனுக்கு அட்வைஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். தரணியும், பரதனிடம் பேசி வருகிறாராம்.

பரதன் லேசுப்பட்ட ஆள் இல்லை. கில்லி படத்தின் வசனகர்த்தாவே அவர்தான். கில்லி படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் வசனம்தான் முக்கிய காரணம். இந்தப் படம் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தது.

பரதனின் திறமையால் கவரப்பட்டுத்தான் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு வாங்கிக் கொடுத்தார் விஜய். ஆனால் இப்போது இருவரும் கதையை மையமாக வைத்து முட்டிக் கொண்டிருப்பதால் தயாரிப்பாளர் அப்பச்சன் கலங்கிப் போயுள்ளாராம்.

திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்தால் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு படத்தை திட்டமிட்டபடி கொண்டு வர முடியுமாம். இல்லாவிட்டால் படம் முடிவது தள்ளிப் போகும் என்கிறார்கள்.

அச்சச்சோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil