»   »  ரஹ்மான் ட்யூனுக்கு விஜய் பாட்டு

ரஹ்மான் ட்யூனுக்கு விஜய் பாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைக்கைப் பிடித்து பாடியுள்ளார் விஜய் - அழகிய தமிழ் மகன் படத்துக்காக.

விஜய் ஆரம்பித்தில் நடிகராக அறிமுகமாகியபோது ஒவ்வொரு படத்திலும் ஒரு பாட்டை கண்டிஷனாக பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தப் பாட்டு படத்தில் வரும்போது இந்தப் பாடலை பாடுவது உங்கள் விஜய் என்ற வாசகத்தையும் போட்டு ரசிகர்களுக்கு எடுத்துக் கொடுத்தனர்.

தொழிலில் பிக்கப் ஆகி, முன்னணி ஸ்டாராக மாறிய பின்னர் பாடுவதைக் குறைத்துக் கொண்டார் விஜய். சும்மா சொல்லக் கூடாது, நல்ல வாய்ஸ் உள்ளவர்தான் விஜய்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அழகிய தமிழ் மகன் படத்தில் பாடியுள்ளார் விஜய். இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் பாடியுள்ள விஜய், ரஹ்மான் இசையில் பாடுவது இதுவே முதல் முறையாகும்.

அழகிய தமிழ் மகனில் விஜய் பாடியுள்ள இந்தப் பாட்டு குத்துப் பாட்டு ரகமாம். ரஹ்மானின் அதிரடி இசையும், விஜய்யின் இன்னிசைக் குரலும் இணைந்து பாட்டுக்கு புது வடிவம் கொடுத்துள்ளாம்.

அழகிய தமிழ் மகன் படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். சுதந்திர தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

முதல் முறையாக இரட்டை வேடம் போட்டுள்ளார் விஜய். விஜய்க்கு ஜோடியாக ஷ்ரியா நடித்துள்ளார். நமீதாவும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளார்.

அழகிய தமிழ் மகனை முடித்த பின்னர் தரணியுடன் கை கோர்க்கிறார் விஜய். மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கும் இப்படத்தில், திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர விஜய் நடிக்கக் காத்திருக்கும் படங்களின் வரிசை நீளமாகவே உள்ளது. அதில் கெளதம் மேனனின் படம், ஏவி.எம். பாலசுப்ரமணியத்தின் படங்கள் முக்கியமானவை. அடுத்த ஆண்டு கெளதம் படத்தில் நடிக்கும் விஜய், 2009ல் ஏவி.எம். பாலசுப்ரமணியத்தின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil