»   »  ரஜினியுடன் நடிக்க ஆசை-விஜய்

ரஜினியுடன் நடிக்க ஆசை-விஜய்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆசையாக உள்ளேன் என்று கூறியுள்ளார் இளைய தளபதி விஜய்.

தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்திற்குப் போட்டி போடுபவர்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் விஜய் நடித்துள்ள போக்கிரி 200வது நாளை நோக்கி வேகமாக போய்க் கொண்டுள்ளது.

நேற்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இதையொட்டி அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய்.

அப்போது விஜய் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். அது எளிதான வாய்ப்பு அல்ல. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சிவாஜி படத்தைப் பார்த்தேன். அசந்து போய் விட்டேன். சூப்பர் ஸ்டாரின் புதிய ஸ்டைல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

நான் எப்போதுமே ரஜினியின் பரம விசிறி. ரஜினி நடித்த அத்தனை படங்களையும் நான் பார்த்துள்ளேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது முரட்டுக்காளைதான்.

அந்தப் படத்தை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.

சிவாஜி படத்தில் எனது படத்தில் இடம் பெற்ற தீபாவளி பாடலுக்கு ரஜினி சார் ஆடியது எனக்குக் கிடைத்த கெளரவம் ஆகும்.

எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எப்போதுமே எளிமையை விரும்புபவன் நான். எனக்கு இது மேலும் ஒரு நாள் அவ்வளவுதான். ஆனால் இந்த ஆண்டு எனது ரசிகர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து விட்டனர்.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதைக் கேள்விப்பட்டதும் நான் நெகிழ்ந்து விட்டேன். நானே நேரில் சென்று மோதிரங்களை அணிவித்தேன்.

நானும் அதே அரசு மருத்துவமனையில்தான் பிறந்தேன். எனவே அங்கு செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதுவரை 35 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிரந்தரமாக ஒரு ரத்த வங்கியை ஏற்பாடு செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். இது இலவச சேவையாக இருக்கும். எனக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து பெற்றுக் கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய நான் ஆசைப்படுகிறேன் என்றார்.

வழக்கமாக நிருபர்கள் கேட்கும் அடுத்த கேள்வி விஜய்யை நோக்கிப் பாய்ந்தது. உங்களுக்குப் பிடித்த ஹீரோயின் யார் என்பதுதான் அது. ஆஹா, கேட்டுட்டாங்கய்யா என்று தடுமாறிப் போன விஜய், தனக்கே உரிய புன்னகையுடன், நீங்கள்தான் படத்தில் பார்க்கிறீர்களே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று டிப்ளமேட்டிக்காக பதில் சொல்லி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

தப்பிச்சுட்டாருய்யா, தப்பிச்சுட்டாருய்யா!

இதற்கிடையே, சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பிரபலமான நேஷனல் தியேட்டரை விலைக்கு வாங்கியுள்ளாராம் விஜய்.

சென்னை நகரிலும், புறநகர்களிலும் சொத்துக்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு பகுதியில் 20 கிரவுண்டு நிலத்தை வாங்கினார் விஜய்.

இந்த நிலத்தில் பிரமாண்டமான மல்ட்டிப்ளக்ஸ் வளாகத்தை நிர்மாணிக்கப் போவதாக கூறியுள்ளார் விஜய்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சாலிகிராமம் பகுதியில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்குச் சொந்தமான 3 கிரவுண்டு நிலத்தை வாங்கினார். அந்த இடத்தை தனது ரசிகர் மன்றம் மற்றும் கல்யாண மண்டப பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு வடபழனியில் ஒரு நிலத்தை வாங்கினார். ஏற்கனவே அவருக்கு 2 கல்யாண மண்டபங்கள் சொந்தமாக உள்ளன.

இந்த நிலையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள பிரபலமான நேஷனல் தியேட்டரை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளாராம் விஜய். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபல தியேட்டர்களில் நேஷனல் தியேட்டரும் ஒன்று. எம்.ஜி.ஆர். படங்கள் பெரும்பாலும் இங்கு திரையிடப்படுவது வழக்கம். திரையிட்ட அத்தனை படங்களுமே 100 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன.

இன்றும் கூட நல்ல நிலையுடன் செயல்பட்டு வருகிறது நேஷனல். தற்போது அது விஜய் வசமாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் நேஷனல் தியேட்டைர விஜய் தரப்பு வாங்கியதாம்.

விஜய்கிட்ட வந்தாச்சுல்ல, இனி இன்டர்நேஷனல் தரத்துக்கு மாறிடும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil