»   »  முன்பு வாய்ப்பு பிச்சை.. இப்போது பைனான்ஸ் பிச்சை..! - விஜய் ஆன்டனியின் வாக்குமூலம்

முன்பு வாய்ப்பு பிச்சை.. இப்போது பைனான்ஸ் பிச்சை..! - விஜய் ஆன்டனியின் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஆண்டனி -- இயக்குனர் சசி இணையும் பிச்சைக்காரன் படம் வரும் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது .

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் இது


ரிலீஸ் ஆகிற பல தமிழ் சினிமாக்கள் குறி வைப்பது வெள்ளி, சனி. ஞாயிற்றுக்கிழமைகளைத்தான். ஆனால் விஜய் ஆண்டனிக்கான ஒப்பனிங்கே புதன்கிழமை வரை போகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது பாக்ஸ் ஆபீஸில்.


Vijay Antony speaks on Pichaikaran

கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர் . கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார் .


படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டததையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர்


கே ஆர் பிலிம்ஸ் சரவணன் பேசும்போது, "இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம் . இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியம் படம். நான், சலீம் படங்களில் காதலையும் ஆக்ஷனையும் விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டு இருந்தார் . இந்தியா பாகிஸ்தான் காமெடி. இந்தப் படத்தில் ஆக்ஷன் , காதல் , காமெடி எல்லாம் இருக்கிறது. அது இயக்குனர் சசியின் பாணியில் மெருகேறி சிறப்பாக வந்துள்ளது," என்றார் .


Vijay Antony speaks on Pichaikaran

இயக்குநர் சசி பேசும்போது, " படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன். எல்லோருக்கும் பிடித்து இருந்தது. எனினும் அண்மையில் எனக்கு கொஞ்சம் பதட்டம். ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது. படத்தைப் பார்த்தார்கள். மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன் .


என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை விடவும் உற்சாக வரவேற்பு . அப்போதுதான் எனக்கு நிம்மதி. படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும்.


இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை. இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை. சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார்," என்றார்.


Vijay Antony speaks on Pichaikaran

விஜய் ஆண்டனி பேசும்போது, "என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், டிஷ்யூம் படத்துல... அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன். அவர் சொன்ன கதை இது. கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன்.


இந்தப் படத்தை தயாரித்து நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்


இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது .


மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். இப்படி பல நிகழ்வுகள்... நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம்.


ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் .


இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலா பட விநியோகம் பண்றீங்க.. பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?'ன்னு கேட்டு இருப்பாங்க . ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினர். என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அவங்க இல்லன்னா நான் இல்ல .


இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்," என்றார்.

English summary
Vijay Antony says that he is proud to play in lead role in Pichaikaran movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil