»   »  இனி 'தம் அடிக்க' மாட்டேன் - விஜய்

இனி 'தம் அடிக்க' மாட்டேன் - விஜய்

Subscribe to Oneindia Tamil
Vijay
இனி எனது படங்களில் நான் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று விஜய் கூறியுள்ளார்.

சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை நெருக்கிய பாமக இப்போது விஜய்யைக் குறி வைத்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், ரஜினி காந்த் படங்களில் புகை பிடிப்பது போல நடிக்கக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல, தம்பி விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு விஜய் தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து விஜய் கூறுகையில், அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது.

அழகிய தமிழ் மகன் படத்தில் நான் ஏற்று நடித்த வில்லன் வேடத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புகை பிடிப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டது. பின்னர் அந்த வில்லன் திருந்தும்போது, சிகரெட்டை தூக்கி வீசி விடுவது போலவும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இனிமேல் எனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்று கூறியுள்ளார் விஜய்.

விஜய்யின் இந்த மின்னல் வேக அறிவிப்பை அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறேன். இதன் மூலம் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

விஜய் தற்போது சென்னையில் குருவி பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். குருவி படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் இயக்குநர் தரணியிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil