»   »  ஏவி.எம். படத்தில் விஜய்

ஏவி.எம். படத்தில் விஜய்

Subscribe to Oneindia Tamil
Vijay

ஏவி.எம். தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் விஜய் நடிக்கவுள்ளார். ஆனால் இது சிவாஜியை தயாரித்த ஏவி.எம் அல்ல, எம்.பாலசுப்ரமணியம், அவரது மகன் பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோரது ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில்தான் விஜய் நடிக்கப் போகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஏவி.எம். நிறுவனம் பிரிந்தது. பாலசுப்ரமணியத்திற்குரிய பங்குகள் அப்போது பிரித்துத் தரப்பட்டன. இதையடுத்து ஏவி.எம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தார் பாலசுப்ரமணியம்.

தனது முதல் படத்தின் நாயகனாக விஜய்யை முடிவு செய்தார். அப்போது ஆதி படம் வந்திருந்த நேரம். விஜய்யிடம், படத்திற்கான அட்வான்ஸையும் அப்போதே அவர் கொடுத்தார். அப்போது, ரஜினியின் முரட்டுக்காளையை ரீமேக் செய்து நடிக்க ஆர்வமாக இருந்தார் விஜய். பாலசுப்ரமணியமும் முரட்டுக்காளையை ரீமேக் செய்யத் தயாராக இருந்தார்.

ஆனால் விஜய் உடனடியாக கால்ஷீட் தரவில்லை. இத்தனை காலமாக காத்திருந்த பாலசுப்ரமணியத்திற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்துள்ளது. விஜய்யின் கால்ஷீட் கிடைத்துள்ளதாம். புதிய படத்திற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்துப் போட்டுள்ளாராம்.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவி.எம் நிறுவனம், இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது.

ஏவி.எம். தயாரிப்பில் விஜய் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். இயக்குநர் உள்ளிட்ட பிற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் பாலசுப்ரமணியன்.

தற்போது விஜய் நடித்து வரும் தரணியின் குருவி, பிரபு தேவா இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படம் ஆகியவற்றை முடித்து விட்டு ஏவி.எம். படத்திற்கு வருகிறார் விஜய்.

ஏவி.எம். - விஜய் இணையும் இப்படம் முரட்டுக்காளையின் ரீமேக் இல்லையாம். வேறு புதிய கதையாம். விஜய்தான், புதிய கதையில் நடிக்கலாம் என்று கூறி விட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil