»   »  சேரன் படத்தில் நடிக்க ஆசை-விஜய்

சேரன் படத்தில் நடிக்க ஆசை-விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vijay
சேரன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சேரன் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார் விஜய்.

முன்பு மாதிரி விஜய் இல்லை. விதம் விதமான இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆசை பிறந்துள்ளது. அதுவும் அந்தந்த டைரக்டர்கள் முன்பாகவே இந்த வேண்டுகோளை வைக்க ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒன்பது ரூபாய் நோட்டு ஆடியோ விழாவின்போது தங்கர் பச்சான் படத்தில் நடிக்க ஆசை என்று தங்கரிடம் கோரிக்கை வைத்தார். இப்போது பிரிவோம் சந்திப்போம் ஆடியோ விழாவில் சேரன் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று அவரிடமே கோரிக்கை வைத்துள்ளார்.

சேரன், ஸ்னேகா நடித்திருக்கும் பிரிவோம் சந்திப்போம் பட ஆடியோ விழா நேற்று சத்யம் திரையரங்க வளாகத்தில் நடந்தது.

விஜய் ஆடியோவை வெளியிட, பிரபுதேவா அதைப் பெற்றுக் கொண்டார். விஜய் பேசுகையில், சேரன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாகவே ஆசையோடு உள்ளேன். நவீன தமிழ் சினிமாவின் திறமையான இயக்குநர்களில் அவரும் ஒருவர்.

சேரன் பிசியான ஹீரோவாகி விட்டார். போட்டியாளராகவும் மாறியுள்ளார். எனவே எனக்கு வாய்ப்பு தர மாட்டார் என்றே நினைக்கிறேன் என்றார் விஜய்.

சேரன் பேசுகையில், ஒரு இயக்குநராக சேரனுடன் இணைந்து பணியாற்ற நான் எப்போதும் தயார்தான் என்று பதிலளித்தார்.

முன்பு ஆட்டோகிராப் படத்தை சேரன் படமாக்க முயன்றபோது விஜய்யைத்தான் நாயகனாக நடிக்க வைக்க தீர்மானித்து அவரையும் அணுகினார். ஆனால் கதை தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று விஜய் கூறி விட்டதாக அப்போது பேச்சு நிலவியது நினைவிருக்கலாம்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரு பாடல்களை நாட்டுக்கோட்டை செட்டியார் கல்யாண வைபவமாக எடுத்துள்ளனர். அந்தப் பாடல்கள் இரண்டுமே அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.

இரு பாடல்களும் நிகழ்ச்சியின்போது போட்டுக் காட்டப்பட்டன. அதைப் பார்த்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணனும், அபிராமி ராமநாதனும், 30 வருடங்களுக்கு முன்பு நடந்த தங்களது கல்யாண வைபவம் நினைவுக்கு வருவதாக புன்னகையோடு தெரிவித்தனர்.

இயக்குநர் கரு. பழனியப்பன் பேசுகையில், இது ஒரு குடும்பக் கதை. குடும்பத்தில் நடக்கும் நிஜமான உணர்வுகளை இந்தப் படத்தில் காட்டியுள்ளேன். நாட்டுக்கோட்டைச் செட்டியார் பாரம்பரியங்கள் இந்தப் படத்தின் பின்னணியாக அமைந்துள்ளன. பொங்கலுக்குப் படம் வருகிறது என்றார்.

பார்த்திபன், மாதவன், வித்யாசாகர், தரணி, கலைப்புலி சேகரன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil